நாட்டில் 350 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. அவை அனைத்திலும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் அறிவிப்புகளை செய்தே வேண்டும். இது சட்டம். இங்கே முதற்கட்டமாக40 ரயில் நிலையங்களை சார்ந்த அறிவிப்பாளர்களுக்கு தமிழ் மொழி அறிவிப்பு பயிற்சி வழங்கும் நான்கு நாள் செயலமர்வை நாம் இன்று ஆரம்பித்துள்ளோம்.
மீதமுள்ள 310 ரயில் நிலைய அறிவிப்பாளர்களுக்கும் கட்டம் கட்டமாக இந்த பயிற்சி விரைவில் வழங்கப்படும். அதன்பிறகு ரயில் நிலையங்களில் தமிழ் மொழி அறிவிப்பு இல்லை என்று எனக்கு புகார் வந்தால், குறிப்பிட்ட ரயில் நிலைய அதிபர் நீதிமன்றம் செல்ல வேண்டிவரும். இவை கடந்த காலங்களில் செய்யப்படாதவை. இப்போது நான் இவற்றை செய்கிறேன். மைதானத்தில் நான் இன்னமும் ஒரு விளையாட்டுப்பிள்ளைதான்.
ஆனால், அரசியலில், அமைச்சு பொறுப்பில் நான் விளையாட வரவில்லை. ஆகவே இங்கே என்னுடன் விளையாட வேண்டாம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ரயில் நிலைய அறிவிப்பாளர்களுக்கான தமிழ் மொழி அறிவிப்பு பயிற்சி செயலமர்வை ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. ஆணைகுழு தலைவர் தயா எதிரிசிங்க, அரசகரும மொழிகள் ஆணையாளர், ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் ஆகியோர் கலந்துக்கொண்ட இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கு தமிழ் மொழி பேசும் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும். அதற்கு குறுக்கு வழி கிடையாது. அதற்கான ஒரு முன்னோடி தேவைதான் இந்த பயிற்சி. இதன்மூலம் நீங்கள் தமிழில் உங்கள் ரயில் நிலையங்களில் அறிவிப்புகளை செய்யும்போது, தமிழ் மக்கள் மத்தியில் இது எங்கள் நாடு என்ற உணர்வு ஏற்படும். வடக்கு கிழக்கில் சிங்களத்தில் அறிவிப்புகள் செய்தால், சிங்கள மக்களுக்கு,இது எங்க ந ஆடு என்ற உணர்வு ஏற்படும். இந்த தாய்மொழி உணர்வு முக்கியமானது.
தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டாலோ, தேசிய மொழிப்பிரச்சினை தீர்க்கப்பட்டாலோ, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று நான் சொல்ல மாட்டேன். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. தேசிய மொழிப்பிரச்சினை தீர்வு என்பது, தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு ஒரு முன்னோடி. இது ஒரு ஆரம்பம்தான். இந்த ஆரம்பம்கூட கடந்த காலங்களில் முறையாக செய்யப்படவில்லை. இப்போது இதை செய்ய நான் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். மைதானத்தில் நான் இன்னமும் ஒரு விளையாட்டுப்பிள்ளைதான்.
ஆனால், அரசியலில், அமைச்சு பொறுப்பில் நான் விளையாட வரவில்லை. ஆகவே இங்கே என்னுடன் விளையாட வேண்டாம். வெறும் சட்டம் என்று மட்டும் பார்க்காமல், அதற்கு அப்பால் சென்று ஒரு தேசிய கடமையாக கருதி இதை செய்யுங்கள். தமிழ் மொழி பேசும் மக்களின் இதயங்களை வெல்லும் எங்கள் தேசிய செயற்திட்ட நகர்வில் நீங்களும் ஒரு பங்காளி என நினையுங்கள்.