மாராவில ஹோட்டலில் 80 வயது பெண் மீது கூட்டுப் பாலியல் : சந்தேக நபருக்கு கடும் சிறைத்தண்டனை

மாராவில கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த 80 வயதுடைய ஜேர்மன் நாட்டு வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்நபருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜாவினால் 7500 ரூபா அபராதத்துடன் கடும் வேலையுடன் கூடிய 13 வருட சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

லிஹிரியாகம கிழக்கு கஹடவில பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை வழங்கப்பட்டவர் வழக்கின் இரண்டாவது பிரதிவாதி என்பதோடு 7ஆவது ஒழுங்க ஜயகம லிஹிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரே வழக்கின் முதலாவது பிரதிவாதியாகும். 

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாத தினம் ஒன்றில் மாராவில கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்த 80 வயதுடைய ஜேர்மன் நாட்டு வயோதிபப் பெண்ணை பலவந்தமாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

துஷ்பிரயோகத்துக்குள்ளான ஜேர்மன் நாட்டு பெண்ணின் மகன் மாராவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுமுறை விடுதி ஒன்றை நடாத்தி வருகின்றார். இந்நிலையில் ஜேர்மனியிலிருந்து வந்துள்ள குறித்த வயோதிபப் பெண் தனது மகனின் ஹோட்டலில் நான்கு வருடங்களாக தங்கியிருந்துள்ளதாக முறைப்பாட்டுத் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் இடம்பெற்ற தினம் இரவு 12.30 மணியளவில் தான் தனது அறையில் உறக்கத்தில் இருந்த போது உடனே அறையின் கதவைத் திறக்குமாறு கூறப்பட்ட சத்தம் கேட்டு கண்விழித்து அறையின் வெளியில் வந்ததாகவும், அதன் போது பிரதிவாதிகள் இருவரும் மேலும் சிலருடன் பலவந்தமாக தனது அறையின் உள்ளே நுழைந்து தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதோடு அறையிலிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றை கொள்ளயைிட்டுக் கொண்டு தப்பிச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்துள்ளது. 

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது முதலாவது பிரதிவாதி தான் நிரபராதி என நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு இரண்டாவது பிரதிவாதி தான் குற்றவாளி என தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஏற்றுக் கொண்டார். இதன் பின்னர் வழக்கின் தீர்ப்பை தெரிவிக்கும் முன்னர் வல்லுறவுக்கு உள்ளான பெண்ணின் வயதை கருத்திற் கொண்டதாகவும், இதன் ஊடாக சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்வது முக்கியமானது என்பதால் இந்த தண்டனையை வழங்கியதாக சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். 

விதிக்கப்பட்ட அபராத தொகையினைச் செலுத்த தவறின் அதற்காக ஆறு மாத இலகு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. வழக்கின் முதலாவது பிரதிவாதி தொடர்பிலான விசாரணைகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -