மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி பணிகளின் முடக்கம் - அமீர் அலி

நாச்சியாதீவு பர்வீன்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் சடுதியாக முடக்கமடைந்துள்ளது. இதனால் துரித அபிவிருத்தியடைந்துவந்த மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவை அடைந்துள்ளது என பாராளுமன்றத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். காலநிலை சுற்றாடல் தொடர்பான விவாதத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் வகையில் இவ்வாறான ஆரோக்கியமான விவாதங்கள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்பதனை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் . விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் என்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் முடக்கம் கண்டுள்ளன என்ற விபரங்களை நான் அறிவேன். இது தொடர்பில் மாவட்ட செயலாளர் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் இதுபற்றி தெரிவித்தார்.சுமார் 9000 மில்லியன் ரூபாய்களுக்கான அபிவிருத்திப் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேங்கிய நிலையில் உள்ளது. 

இது கவலைக்குரிய விடயமாகும். இதற்கான காரணம் இந்த மாவட்டத்திலிருந்து கிறவல் மற்றும் மணல் சட்டவிரோதமாக அகழ்வதும் இலாப நோக்கில் கூடிய விலைக்கு வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வதுமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வளங்கள் சுரண்டப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டவிரோத மண் அகழ்வு பற்றி பூலோக விஞ்ஞான திணைக்கள அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இன்னும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக நாங்கள் தெரிவித்து வருகிறோம். இருந்தபோதும் இதனை கட்டுப்படுத்துவதில் என்ன தடங்கல் இருக்கின்றது என்பதை இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதும் பெரும் குறைபாடாகவே நான் கருதுகிறேன்.

எமது மாவட்டத்திற்குத் தேவையான கிறவல், மணல் போன்றவற்றை ஏதோ ஒரு வகையில் சட்டவிரோதமாக வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்பவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பில், மட்டு மாவட்டத்து அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அரச அதிபர் அவர்களின் தலைமையில் இந்த மாவட்டத்தின் அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து பல காத்திரமான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இருந்தபோதும் இந்த சட்டவிரோத நடவடிக்கை குறைவில்லாமல் நடந்துகொண்டிருப்பது கவலை தரும் விடயமாகும். யார் எப்போது செய்கின்றார்கள் என்கின்ற தகவல்கள் இன்னும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பூரணமாக கிடைக்கவில்லையென்றே அதிகாரிகள் சொல்லுகின்றார்கள். இதன்மூலம் மட்டு மாவட்டத்தின் பாதை அபிவிருத்தி, கட்டிட அபிவிருத்தி, வடிகால் அபிவிருத்தி, வீட்டுத் திட்டங்கள் என்பன இன்னும் நிலுவையிலேயே கிடக்கின்றன.

மிகப் பெருந்தொகையான பணத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருந்தபோதும் குறிப்பிட்ட கால எல்லையில் இந்த அபிவிருத்திப் பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம், மட்டகளப்பு மாவட்டத்தில் தேவையான அளவில் வளங்கள் இருந்தும் , இங்குள்ள வேலைகளுக்காக தேவையான அளவு கிறவலோ அல்லது மணலோ இல்லாமையே என்பதனை இங்கு நான் கவலையோடு பதிய விரும்புகிறேன். இந்நிலை தொடருமாயின் மட்டு மாவட்டத்தில் எதிர்கால அபிவிருத்தியும் கேள்விக்குறியாகிவிடுமோ என்று நான் அச்சமடைகிறேன். எனவே, இதுதொடர்பில் உயர்மட்ட பொறிமுறை ஒன்றை இனங்கண்டு சட்டவிரோத கிறவல் அகழ்வு மண் அகழ்வு போன்றவற்றில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தக்கூடிய இறுக்கமான சட்டமொன்றை உருவாக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன். 

கடந்த முப்பது வருடகாலமாக யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீண்டுள்ள மட்டு மாவட்ட மக்களின் துரித தேவைகளான அபிவிருத்திப் பணிகளை இதன்மூலம் விரைவில் செய்யக்கூடிய சாத்தியம் ஏற்படும் என நான் நம்புகிறேன். எனவே, இதுதொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் கரிசனையுடனும் செயலாற்ற முன்வருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதோடு அந்த மக்களின் அவலம் தொடர்பான இந்த விடயங்களை இந்த உயரிய சபையில் நான் பதிகிறேன் என அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -