பொத்துவில் தாஜகான்-
பொத்துவில் பிரதேசத்தின் நீண்ட நாள் கனவாகவும் , உரிமைப் போராட்டமாகவும் எதிர்கால மாணவர்களின் கல்வியினை அபிவிருத்தி செய்து வித்திடக்கூடிய ஒன்றுதான் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயமாகும். இக்கல்வி வலயத்தை பெற்றெடுப்பதற்காக மாகாண சபையில் பலமுறை பிரேரனைகள் நிறைவேற்றப்பட்டு கிடப்பில் கிடந்த நெடும் வரலாற்றுத் தொடரில் நேற்று( 21) கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் கொடுக்கப்பட வேண்டும் என பிரேரனை நிறை வேற்றப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.....
முதலில் இப்பிரேரனையினை நிறைவேற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர், மாகாண அமைச்சர் நசீர், மாகாணசபை உறுப்பினர் தவம் மற்றும் கிழக்குமாகாணத்தின் கல்வியமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர்களுக்கு பொத்துவில் மக்கள் என்றும் நன்றிக்கடன் உடையவர்கள்....
பொத்துவிலுக்கான தனிக்கல்வி வலயம் என்பது இன்று நேற்று எடுக்கப்பட்ட முடிவல்ல. இது வடகிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சர் சுந்தர திவகர்லாலா அவர்களினால் 1998.11.09 பொத்துவிலுக்கான உபவலயமாக இயங்குவதற்குரிய அனுமதி அப்போது வழங்கப்பட்டது. இவ்வாறு இருக்க பொத்துவில் கல்வியின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டு நிர்வாகம் கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் பொத்துவிலுக்கான தனிவலயம் பெற்றெடுப்பதில் பொத்துவில் மக்கள் விடாப்பிடியாக இருந்தார்கள். அதற்குரிய காரணங்களில் மிக முக்கியமானது ஆசிரியர் பற்றாக்குறையாகும். பொத்துவில் பிரதேசத்தின் இடவமைவு, பாடசாலைகள் இனரீதியாக பிரிப்பு இவ்வாறான காரணங்களால் பொத்துவில் கல்வி அடிமைப்படுத்தப்பட்டு திறமையான மாணவர்களின் வாழ்வு கூட சிதறடிகக்ப்பட்டு கொண்டிருந்த பொழுது, இதனை ஒரு பேசு பொருளாகவும், வாக்குகளை சுவீகரிக்கும் ஒரு பொருளாதாரச் சிட்டாகவும் அரசியல்வாதிகள் பயன்படுத்தி வந்தார்கள்....
கடந்த மகிந்த அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆட்சியின் போது பொத்துவிலுக்கான தனிவலயம் கோரிக்கைகள் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த பொழுதும் அது பலத்த அரசியல் பிரச்சினைகள்,உள்ளுர் அரசியல் தலையீடுகள், மாவட்ட அரசியல் அமைச்சர்களினால் தட்டிக்கழிக்கப்பட்டது. அப்பொழுது பொத்துவில் மக்கள் ஏமாறற்த்தோடு காலம் கழித்தனர்..
ஆட்சிமாற்றம் நடைபெற்றதன் பின்னர் இலங்கையில் ஜனநாயக நீரோட்டத்திற்கான வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. அவற்றில் சிவில் அமைப்புக்கள் மிக முக்கிய தளங்களை செய்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பொத்துவிலில் நீண்டகால கல்விப் பிரச்சினையாகவும், அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தையாகவும் செயற்பட்ட கல்வி வலயத்திற்கான தேவையினை மையப்படுத்தி பொத்துவில் இன்டலெக்சுவல் அமைப்பு உதயமாகியது. இந்த அமைப்பின் உருவாகக்ம் பல மாற்றங்களை கல்வியில் ஏற்படுத்தியது.
பொத்துவில் இன்டர்லெக்சுவல் அமைப்பானது பொத்துவிலின் பெற்றோர்களை முதலில் விழிப்புணர்வூட்டி தட்டியெழுப்பி தனது பிள்ளைகளின் உரிமைகளை தான் கேட்க வேண்டுமென குரல் கொடுத்தது. வீதிகளில் இறங்கி ஜனநாயக ரீதியான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், போஸ்டர்கள், சந்திப்புக்கள் என்பவற்றை நடாத்தியது. இதன் விளைவு பொத்துவிலில் பாரிய கல்விசார் விழிப்புணர்வு ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் பொத்துவில் இன்டலெக்சுவல் அமைப்பு மாகாண சபையின் கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், கல்வியமைச்சின் செயலாளர்கள் என்பவர்களை சந்தித்து பொத்துவிலுக்கான தனிவலயத்திற்கான கோரிக்கையினை முன்வைத்தது.
இந்த வகையில் மாகாண கல்விப்பணிப்பாளர் அவர்களின் ஒத்துழைப்பை பொத்துவில் கல்விச் சமூகம் நன்றியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. மாகாணக் கல்விப்பணிப்பாளர் அவர்களின் கருத்தும் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் தேவையென்பதை கருத்தாடல்கள் சுட்டியிருக்கின்றன.
இத்தகைய நகர்வில் கடந்த மாதம் பொத்துவிலின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் சகோதரர் வாசீத், பிரதேச சபையின் உறுப்பினர் அப்துல் றகீம் அவர்களின் தலைமையில் பொத்துவிலின் கல்வி பற்றிய சந்திப்பினை முதலமைச்சர் அவர்களோடு நடாத்தியது. முதலமைச்சரும் பொத்துவிலுக்கான அரசியல் அதிகாரம் பூச்சியமாக இருக்கும் பொழுது இவர்களின் கல்விப் பிரச்சியினை தீர்ப்பதற்கு எத்தணித்தார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அத்தனை பேரும் எதிர்ப்பின்றி பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் பிரேரனை அமைச்சர் அவையில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அங்கிகாரம் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் வந்து விட்டதாக நினைக்க கூடாது. இது மத்திய கல்வியமைச்சின் சிபார்சு, மற்றும் பௌதிகவளம், ஆளணியினரின் தொகை என்பன அடிப்படையாகக் கொண்டுதான் தனிவலயமாக தரமுயர்த்தப்படும்...
மத்திய அரச செயற்பாடுகளுக்கான வாய்ப்புகளையும், சந்தர்ப்பங்களையும் பொத்துவில் இன்டலெக்சுவல் முன்னெடுத்து வருகின்றது. ஆனால் அதனை குளறுபடி செய்வதற்கு பலர் முயற்சி செய்து வருகின்றார்கள். இந்த முயற்சி என்னவெனில் தன்னால் இக்காரியம் நடைபெற வேண்டுமென அரசியல்வாதிகளின் போட்டா போட்டிதான்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது பொத்துவிலின் அதிகப்படியான வாக்குகளை வென்ற கட்சி இக்கட்சியானது பொத்துவில் அபிவிருத்தியில் பலத்த பங்களிப்பை செய்ய வேண்டிய கடப்பாடும் உள்ளது. அதே வேளையில் அமைச்சர் றிசாத் அவர்களின் கட்சியும் பொத்துவிலுக்கான அபிவிருத்தியில் இன்னும் சரியானதை தேர்தல் மேடைகளில் கூறிய கதைகளை நிறைவேற்றாமல் இருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் இத்தகைய கட்சித் தலைமைகள் அதுசார் அமைச்சர்கள் பொத்துவில் மக்களின் நீண்டநாட் கனவாகிய பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தை பெற்றெடுக்க முன்வாருங்கள்....
பொத்துவில் இன்டலெக்சுவல் அமைப்பு செய்கின்ற கல்வி நலன்சார் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்க முன்வாருங்கள்....எடுக்கப்பட்ட மாகாண சபையின் முடிவினை மத்திய அரசாங்கத்திற்கு கொண்டு சென்று அதனை நிறைவேற்றி பொத்துவில் அப்பாவி மக்களின் கல்விக் கண்ணீரைத் துடையுங்கள். இல்லையென்றால் இறைவனின் சந்நிதியில் நீங்களெல்லாம் கடன்காரர்கள்தான்.