கிராமின்வங்கி திட்டத்தை அல்லது நுண்கடன் திட்டத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தவரும், நுண்கடன் திட்டத்தின் ஸ்தாபகரும், நோபல் பரிசு பெற்றவருமான பங்களாதேஷைச் சேர்ந்த பேராசிரியர் யூனுஸ் அவர்களை, மலேசியாவில் சந்தித்துப் பேசிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போதிய வளங்கள் இருப்பதால். அங்கு வந்து கிராமின்வங்கித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கில் விதவைகள்,யுவதிகள், இளைஞர்கள் தொழில்வாய்ப்பு இன்றி இருப்பதாகவும் அவர்களுக்கு சுயமாகத் தொழில் செய்யக்கூடிய வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க உதவுமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இதன் மூலம் இலங்கை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த பேராசிரியர் யூனுஸ் உலகரீதியிலும் பங்களாதேஷிலும் கிராமின்வங்கித் திட்டத்தின் மூலம் தாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், ஆற்றிய பங்களிப்புகளையும் எடுத்து விளக்கினார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தன்னாலான அணைத்து ஆலோசனைகளையும் நல்குவதாக உறுதியளித்தார்.