ஏறாவூர் நிருபர்: ஏ.எம்.றிகாஸ்-
ஏறாவூர் -இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் சூத்திரதாரி எனக் கருதப்படும் நபர் உட்பட ஆறுபேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸ் விசாரணையில் விரைவு மற்றும் முன்னேற்றகரமான திருப்பம் ஏற்படாது தொய்வுகாணப்படுவதாக பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுபிபினர் அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்றத்தில் (21.09.2016) ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில் -
எனது சொந்த ஊரான ஏறாவூர் பொலிஸ் நிருவாகத்திற்குட்பட்ட பகுதியில் செப்டம்பர் 11ம் திகதி அதிகாலை நடைபெற்ற ஒரு துக்ககரமான சம்பவத்தை இச்சபையிலே சமர்ப்பிக்கின்றேன். கடந்த 10ம் திகதி முகாந்திரம் வீதி, ஏறாவூர் - 6 என்னும் முகவரியில் வசித்த மிகவும் ஒழுக்கமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த 56 வயது தாயும் , 32 வயது மகளும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் மிகவும் கொடுரமாக அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளனர். மறுநாள் காலை 11.00 மணியளவிலேயே கொலைச் சம்பவம் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு தெரியவந்தன.
அன்றையதினம் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, அமைச்சர் அமீர் அலி, முதலமைச்சர் நஸீர் அகமட் , மாவட்டச் செயலாளர் சார்ள்ஸ் ஆகியோருடன் மாவட்டத்தில் நடைபெற்ற பல தொடர் நிகழ்ச்சிகளில் நான் பங்குபற்றிக்கொண்டிருந்தவேளையில், இச்சோக நிகழ்வைக்கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தவனாக, சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம்செய்து, பொலிஸ் மேலதிகாரிகளையும், விசாரணைக் குழுவினரையும் அங்கிருந்த பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தினர்களையும் சந்தித்தேன். இந்த விசாரணைகள் துரிதமாகவும் விவேகமாகவும் நடப்பதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்து வைத்தேன்.
கடந்த 13ம் திகதி சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் இரவு 10.00 மணியளவில் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாயலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டபின்னர், அங்கு கூடியிருந்த பொது அமைப்புக்களால் கொலையாளிகளைக் கண்டித்தும் ,பொலிசாரின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தக்கோரியும் கவனயீரப்பு போரட்டங்களும் நடாத்தப்பட்டன. இக்கொலையையடுத்து ஏறாவூர் மக்கள் மிகவும் அச்சத்துடனும், அதிர்ச்சியுடனும் காணப்படுகின்றனர். மக்களின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது, கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென்ற ஆத்திரமும் ஆதங்கமும் மக்களிடம் நிறைந்துள்ளது.
ஆரம்பத்தில், கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் மாத்திரம் சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், சீசீரீவி கமரா பதிவுகள் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் நபர், மக்களால் இனங்காணப்பட்டதும். அவர் 18.09.2016ம் திகதி பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டதும் கொலை தொடர்பான பலதகவல்களை வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் மறைத்துவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உட்பட களவாடப்பட்ட நகைகள்,கொலையாளியின் இரத்தக் கரைபடிந்த ஆடைகள் என்பனவும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.
அன்றையதினம் கொலைச் சந்தேகநபர்களைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கக் கோரியும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஏறாவூ10 பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் ஒன்று கூடி மக்களை அமைதிப்படுத்தி, அங்கிருந்து கலைந்துசெல்ல வைத்தனர்.
அதன் பின்னர்கடந்த 20.09.2016ம் திகதிமேலும் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கைதுசெய்ததன் பின்னர், மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தவேளையில், இக்கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றங்களோ, திருப்பங்களோ இடம்பெறாத நிலையில், தொய்வு நிலை காணப்படுவதையிட்டு பொலிசாரின் நடவடிக்கைகளில் மக்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றதா ? உயர் பொலிஸ் அதிகாரிகள் கொலையாளிகளை தப்பிக்கவைக்க முயற்சிக்கின்றார்களா? என்ற வினாக்களை இப்பகுதிமக்கள் என்னிடம் கேட்கின்றனர். முக்கியகொலைச் சூத்திரதாரிகளை கண்டுபிடுப்பதில் மிகவும் சிறப்பாக இயங்கும் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இவ்வாறான ஓர் அவப்பெயர் ஏற்படக்கூடாதென்று நான் நினைக்கின்றேன்.
எனவே இச் சந்தேக நபர்களை முறையாக விசாரணைகளுக்கு உட்படுத்தி கொலையாளிகளை கண்டுபிடிக்க பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களும், பொலிஸ் மாஅதிபர் அவர்களும் உடனடியாக கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்று அவரது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.