தற்போது ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த கூறுவது தவறு என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் அதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில்தான் ஊடகவியலாளர்கள் அதிகம் தாக்கப்பட்டும் கடத்தப்பட்டும் இருந்தனர். தற்போதைய ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர்களை விமர்சித்தால் கூட பதில் வழங்கும் அதிகாரம் ஊடகவியலாளர்களுக்கு உண்டு எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், நாமலின் வாகனம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தினால் பெறப்பட்டது அல்ல எனவும் குறிப்பிட்டார்.
குறித்த வாகனத்தின் பெறுமதி ஒன்றரை கோடி எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போன்று நாமலுக்கும் வாகனம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் அதை விற்று விட்டார். அது தற்போது உரிமையாளரிடம் உள்ளது என மஹிந்த அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.