இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் நுவன் குலசேகரவின் வாகனம் மோதியதில் இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்திருந்தார். இச்சம்பவம் தொடர்பில் கைதான குலசேகர பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அரவிந்த என்றழைக்கப்படும் 28 வயது இளைஞனே விபத்தில் உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் உறவினரொருவர் பேஸ்புக்கில் இட்ட பதிவொன்று சமூகவலைதளங்களில் பரவிவருகின்றது.
தாமர நிசங்க என்ற அந்நபர் இட்ட பதிவில், உயிரிழந்த இளைஞனான அரவிந்த தனது உறவினர் என தெரிவித்துள்ளதோடு, நுவன் குலசேகர மற்றும் அரவிந்த ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் பழக்கமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார். இருவரும் ரன்பொகுனகமவில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடிவர்கள் என அந்நபர் குறிப்பிட்டுள்ளார்.
குலசேகரவும் , நிட்டம்புவ ரன்பொகுனகம பிரதேசத்தில் வளர்ந்தவர். அவர் ரன்பொகுனகம மஹா வித்தியாலயத்தில் கல்விகற்றிருந்தார். இவ்விபத்தும் குலசேகர தனது சொந்த ஊருக்கு சென்று திரும்பும் வேளையிலேயே இடம்பெற்றிருந்தது.
அரவிந்தவும், குலசேகரவும் சிறிய வயதில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.