வசீம் தாஜூடீன் சுமார் 15 முதல் 20 வரை உடல் பகுதி மாதிரிகள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது, அப்போதைய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றிய விசேட சட்டவைத்திய நிபுணர் மருத்துவர் ஆனந்த சமரக்கோன், தாஜூடீனின் உடல் பகுதிகளின் மாதிரிகளை உரப் பைகளில் இட்டு மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
பிரதான சட்டவைத்திய அதிகாரியின் அலுவலக ஊழியர்கள் வழங்கிய வாக்குமூலங்களுக்கு அமைய தாஜூடீனின் உடல் மாதிரிகள், மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்றமைக்கான சாட்சியங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தின் அடிப்படையில், மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தாஜூடின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர்.