பாசிக்குடா கடலில் காணாமல் போன அண்ணனின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதை தொடர்ந்து தம்பியின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. சடலங்களை பார்வையிட்ட அக்கா மயக்கமுற்று விழுந்தமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விரிவாக..
வாழைச்சேனை பாசிக்குடா கடலில் குளிக்கச்சென்ற தமது இரு மகன்மாரும் நீரில் மூழ்கி உயிரிழந்த தகவலை கேள்வியுற்ற பெற்றோர் துக்கம் தாங்காத நிலையில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். கல்குடா விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சண்முகம் (வயது 54), அவரது மனைவியான யோக லக்ஷ்மி (வயது 46) ஆகிய இருவருமே தமது இரு மகன்மார் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதை கேள்வியுற்று தமது வீட்டின் முன்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்தனர்.
21 வயதான சண்முகம் சதீஸ் குமார், 18 வயதான சண்முகம் சுரேஷ் குமார் ஆகிய இளைஞர்களே கடலில் மூழ்கி உயிரிழந்த இரு மகன்மாராவர். பாசிக்குடா கடலில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் ஐந்து நண்பர்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்களில் ஒருவரைத் தவிர நால்வர் கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து கரையில் நின்ற நண்பன் கூச்சலிட்டு உதவிகோரியுள்ளார்.
இதன்போது பிரதேசத்தின் மீனவர்களின் உதவியுடன் இரண்டு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஏ. ரஜிநாதன் (வயது 16), கே. டிலக்ஸ்மனன் (வயது 16) ஆகியோரே இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களாவர். எனினும் சிகை அலங்கார தொழிலாளியான சண்முகம் சதீஸ் குமார் (அண்ணன் வயது 21) மற்றும் அவரது சகோதரனான கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சண்முகம் சுரேஷ் குமார் (வயது 18) ஆகியோர் அலைகளால் அல்லுண்டு செல்லப்பட்டு காணாமல் போயினர்.
இந் நிலையில் இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போன மேற்படி இரு சகோதரர்களில் அண்ணனின் சடலம் காலையில் மீட்கப்பட்டதோடு தம்பியின் சடலம் பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இருவரின் சடலங்களும் பாசிக்குடா கடற்கரையில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு பின்னால் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இருமகன்மாரும் கடலில் மூழ்கியதை கேள்வியுற்ற பெற்றோர்கள் பெரும் துயரடைந்திருந்த நிலையில் வீட்டுக்கு முன்னால் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிகையலங்கார தொழிலாளியான வேலுப்பிள்ளை சண்முகம் மற்றும் அவரது மனைவி சண்முகம் யோக லக்ஷ்மி ஆகியோருக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
இவர்களில் ஒரு பெண் பிள்ளை கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்திருந்தார். மற்றொரு பெண்பிள்ளை திருமணம் முடித்துள்ள நிலையில் அவரது கணவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருகின்றார். மகன்மாரும் பெற்றோரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையிலேயே கடலில் மூழ்கி மகன்மார் உயிரிழந்த செய்தியை அறிந்து சோகம் தாங்க முடியாது பெற்றோர்கள் தூக்கிட்டு தமது உயிரை மாய்த்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் கல்குடா, பட்டியடிச்சேனை கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள பெற்றோர்கள் மற்றும் சடலமாக மீட்கப்பட்ட மகன்மார் ஆகியோரின் சடலங்கள் இன்று வாழைச் சேனை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக விஷேட அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக கொண்டு வரப்பட்டது. சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இறந்தவர்களின் இறுதி கிரியைகள் நாளை பிற்பகல் நடைபெறும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.