சகல இன மக்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் - அமைச்சர் ஹக்கீம் பென் கீ மூனிடம் வலியுறுத்து

ஷபீக் ஹுஸைன்-
ல்லிணக்க செயற்பாடுகள், ஜெனீவா தீர்மானத்திற்க்குப் பின்னரான பொறுப்புக் கூறுதல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை என்பவற்றைப் பொறுத்தவரை நாட்டின் சகல இன மக்களுக்கும் நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஐ.நா. செயலாளர் நாயகம் பென் கீ மூனிடம் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பென் கீ மூன் மற்றும் சபா நாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான இலங்கை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (2) முற்பகல் இடம்பெற்றபோதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் முன்னிலையில் மேலும் தெரிவித்ததாவது, 

இந் நாட்டின் பெரிய தேசிய கட்சிகள் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்கும் நோக்கத்துடன், உத்தேச தேர்தல் சீர்திருத்தத்தின்போது தொகுதிகளை வரையறுத்து நிர்ணயிக்கும் விடயத்தில் உதாசீனாமாகவும், வெறுப்புடனும் நடந்துகொள்கின்றன எனவும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பிலும் பென் கீ மூனிடம் அமைச்சர் ஹக்கீம் குற்றம் சாட்டினார். இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறுக்கிட்டு சிறுபான்மை கட்சி இந்த விடயத்தில் தீவிரவாத போக்கை கடைபிடிப்பதாக குற்றஞ்சாட்டியபோது அவருக்கும் அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

குறிப்பாக ஜெனீவா தீர்மானத்தின்படி 2002ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட சம்பவங்களை மட்டுமே கவனத்தில்கொள்வது என்பது, இந்நாட்டின் ஒரு சிறுபான்மை இனத்தவரான முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் ஆகையால், இனப்போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து, அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் முன்னெடுக்கப்பட தொடங்கிய 1980 மற்றும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நடந்த கொடூரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் உள்ளடங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதுவும் நல்லிணக்கத்துக்கு வழிகோலுவதாக அமையும். 

நல்லிணக்க செயற்பாடுகள், ஜெனீவா தீர்மானத்திற்க்குப் பின்னரான பொறுப்புக் கூறுதல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை என்பவற்றைப் பொறுத்தவரை நாட்டின் சகல இன மக்களுக்கும் நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையில் மீள் குடியேற்றத்தைப் பொறுத்தவரை நீண்டகாலை இடம்பெயர்ந்தோர், பின்னர் இடம்பெயர்ந்தோர் என்ற வேறுபாட்டை கவனத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படாமல் அதற்கு வழிவகுத்த அனைத்து காரணிகளையும், பின்னணிகளையும் சீர்தூக்கிப் பார்த்து பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நிவாரணங்களும், இழப்பீடுகளும், மாற்றீடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பென் கீ மூன் கலந்துரையாடலில் பங்குபற்றிய கட்சித் தலைவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில்,சபா நாயகர் தலைமையில் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளின் தலைவர்களுடனான இச்சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது. ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.

பிரச்சினைக்குரிய விடயங்களில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சியினர் தங்களுக்கிடையில் பேசி சுமூகமான தீர்மானங்களுக்கு வரவேண்டும். எனது அவதானிப்புகள் மீது ஐ.நா. சபை கூடுதல் கவனம் செலுத்தும். நாட்டின் நல்லிணக்க செயற்பாட்டுகள் சகல தரப்பினரதும் இணக்கப்பட்டுடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

இக்கலந்துரையாடலில் சபா நாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், பிரதிச் சபா நாயகர் திலங்க சுமதிபால பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸாநாயக ஆகியோர் பங்குபற்றினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -