முஸ்லிம்களின் குர்பான் கடமைக்காக மாடுகள் அறுப்பதற்கு அனுமதி வழங்கும் போது நாட்டின் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி இனங்களுக்ககிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் படி சிங்கள ராவய அமைப்பு உள்ளூராட்சி ஆணையாளர்களிடமும் பிரதேச செயலாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து மாநரசபை ,நகரசபை ஆணையாளர்களிடமும் பிரதேசசபைகளின் செயலாளர்களிடமும் இவ்வாறான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளதாக சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
குர்பான் மாடுகள் அறுப்பது தொடர்பில் சிங்கள ராவயின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், குர்பானுக்கான மாடுகள் அனுமதியளிக்கப்பட்டுள்ள மாடுகள் அறுக்கும் மடுவங்களிலேயே அறுக்கப்படவேண்டும்.
மேல் மாகாணத்தில் ராகமையில் உள்ள மாடுகள் அறுக்கும் மடுவத்தை மாத்திரமே பயன்படுத்த முடியும். முஸ்லிம்கள் அவர்களது குர்பான் கடமைக் காலத்தில் தாம் நினைத்த இடங்களிலெல்லாம் வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் மாடுகள் அறுப்பதற்கு உள்ளூராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது.
அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டு அதன் காரணமாக இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டால் அதற்கு மாநகரசபை மற்றும் நகரசபை ஆணையாளர்களும் பிரதேச செயலாளர்களுமே பொறுப்புக் கூறவேண்டும்.
முஸ்லிம்கள் ஏனைய இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாட்டின் சட்டத்திற்கு அமைய தமது சமயக் கடமையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இந்துக்கள் மாடுகளை தெய்வமாக வணங்குகிறார்கள்.பௌத்தர்களும் மிருக வதையை எதிர்ப்பதுடன் மாடுகள் அறுப்பதைத் தடை செய்யவேண்டும் என்கிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மாடுகள் அறுக்கும் விடயத்தில் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்தி இதன் மூலம் நாட்டில் இன முறுகல் ஏற்படாதவாறு ஆவன செய்ய வேண்டும்.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கும் சிங்கள ராவய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.