மத்தள சர்வதேச விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் போன்றவற்றின் நிர்வாகத்தினைப் பொறுப்பேற்க 19 வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அரசாங்கதகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்க 7 நிறுவனங்களும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்க 2 நிறுவனங்க ளும் இலங்கை விமான சேவைகள் நிறு வனத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்க 10 நிறுவனங்களும் இவ்வாறு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு முன் வந்துள்ள 7 நிறுவனங்களுள் ஐ. இசெட். பி . என்ற சீன நிறுவனம் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிவில் விமான சேவைகள் அமைச்சின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே மேற்குறிப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பை கையேற்க விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே போன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக பொறுப்பினை கையேற்பதற்கு இத்துறைமுக நிர்மாணப் பணியில் ஈடுபட்ட சீன ஹாபர் நிறுவனம் மற்றும் கொழும்பு துறைமுக
நகர அபிவிருத்திப் பணியை முன்னெடுத்துவரும் சீன மேர்ச்சன்ட் நிறுவனமும் முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இவ்வாறு இந்த மூன்று அரச நிறுவனங்களின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு 19 வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் எந்த நிறுவனங்களுக்கு குறித்த நிர்வாக பொறுப்பை கையளிப்பதென்ற முடிவை இன்னும் அரசாங்கம் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.