க.கிஷாந்தன்-
புஸ்ஸல்லாவ பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படும் கைதியின் இறுதிச் சடங்கு 19.09.2016 அன்று மாலை சுமூகமான முறையில் புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்ட பொது மயானத்தில் இடம்பெற்றது. புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் (வயது 28) என்ற இளைஞன் குற்றச் செயல் ஒன்றின் காரணமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
பின்னர் நீதிமன்றத்தினால், குறித்த நபர் சமூக சேவைக்கு உள்வாங்கப் பட்டிருந்த நிலையில் அதற்கு சமூகமாகாத நிலையில் ஹெல்பொட நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கபட்டிருந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபர் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்ததை தொடர்ந்து 18.09.2016 அன்று புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் பாரிய பதற்ற நிலை தோன்றியது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கம்பளை பதில் நீதவான் சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கும் வைத்தியசாலை பிரேத அறைக்கும் சென்று பிரேதத்தை பேராதெனிய சட்ட வைத்திய நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்புமாறு பணித்திருந்தார்.
இறந்தவரின் உடற்பாகங்கள் கொழும்பிற்கு அனுப்பியதன் பின்னர் பிரேதம் உறவினர்களிடம் 18.09.2016 அன்று இரவு கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் 18.09.2016 அன்று பகல் 12 மணிமுதல் 3.00 மணிவரை சுமார் 1000 தோட்ட தொழிலாளர்கள், கண்டி- நுவரெலியா பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும், பிரச்சினைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறும், நடைபெற்றது தற்கொலை அல்ல கொலை அதற்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததினால் போராட்டம் 03.00 மணிவரை நீடித்தது. பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அமைச்சர் பழனி திகாம்பரம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஸ்தலத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு மக்களின் கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
தற்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர் தற்காலிக பணி இடை நிறுத்தத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிரேதம் நல்லடக்கம் செய்யும் முன்னரோ, அதற்கு பின்னரோ போராட்டங்கள் நடாத்த முடியாது என அதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.