ஊடகப்பிரிவு-
அளுத்கமையில் தர்ஹா நகர் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்று தீப்பிடித்து தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச்சம்பவம் குறித்து இரசாயனப்பகுப்பாய்வு மேற்கொண்டு சதிமுயற்சியா? அல்லது தற்செயலாக நடந்ததா? என்ற உண்மையை கண்டறியுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தர்ஹா நகர், அளுத்கம போன்ற இடங்களில் இவ்வாறான கடை எரிந்த சம்பவங்கள் இடம்பெற்றமை இது முதற்தடவையல்ல. ஏற்கனவே இரண்டு முறை இந்தப்பிரதேசங்களில் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக காடைத்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டும் அவர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும் இருக்கின்றன.
இந்தப் பின்ணணியில் இந்தச் சம்பவமும் அதையொற்றிய செயலாகவும் இருக்கலாமென்ற நியாயமான சந்தேகம் அங்கு வாழும் முஸ்லிம்களிடையே இருக்கின்றது. எனவே இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதன் மூலமே சமூக ஒற்றுமையை தொடர்ந்து நிலை நாட்ட முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச்சம்பவம் திட்டமிட்டுச் செய்யப்பட்டிருந்தால் உரியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.