இனவாத பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை தூண்டிவிட வேண்டாம்: நாம் இலங்கையர் என்போம் - மனோ கணேசன்

னவாத பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை தூண்டிவிட முயற்சிக்க வேண்டாம். இது சகவாழ்வு காலம். நாம் இலங்கையர் என்று முதலில் சொல்லுவோம். இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை இனத்துக்கும், மொழிக்கும், மதத்துக்கு வழங்குவோம். இதை உங்களுக்கும், சிங்கள சகோதரர்களுக்கும் நான் சொல்கிறேன். “சிங்களவர்களே எழுந்து நில்லுங்கள்” என்று அநகாரிக தர்மபால அன்று சொன்னார். “இலங்கையர்களே எழுந்து நில்லுங்கள்” என்று இன்று நான் சொல்கிறேன். இதைதான் ஜனாதிபதியும் சொல்கிறார். 

தென்னாபிரிக்காவில் உதித்த தேசிய தலைவர் நெல்சன் மண்டேலா, ஆட்சிக்கு வந்ததும் வெள்ளையர்களை வெறுக்கவில்லை. அவர்களையும் உள்வாங்கித்தான் நாட்டை உருவாக்கினார். அதே நாட்டின் பக்கத்து நாடான சிம்பாப்வேயில், ஆட்சிக்கு வந்த ரொபர்ட் முகாபே வெள்ளையர்களை வெறுத்து ஒதுக்கினார். இதனால் அந்நாடு அழிந்தது. அதுவேதான் இலங்கையிலும் நடந்தது. 1948ம் ஆண்டு ஆட்சி பலம் வந்தவுடன் நீங்கள் தமிழர்களை ஒதுக்கினீர்கள். இதனால் நாடு அழிந்தது. ஒரு காலத்தில், தென்னிலங்கை சிங்கள தலைவர்கள் வடக்கே சென்று சமஷ்டி முறைமையை முன்வைத்தார்கள். அப்போது தமிழ் தலைமை அதை நிராகரித்தது. அப்படி தெற்கில் இருந்து வந்த சமஷ்டி யோசனையை நிராகரித்த தமிழர்கள்,பிற்காலத்தில் 180 பாகை தலைகீழாக மாறி, ஏன் தனி ஒரு நாட்டை கோரினார்கள் என்ற கேள்விக்கு விடை தேடுங்கள். உரிய விடை கிடைக்கும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற தனியார் தொலைகாட்சி சிங்கள மொழியிலான அரசியல் விவாதத்தில் அமைச்சர் மனோ கணேசன், பொது எதிரணி எம்பி கெஹெலிய ரம்புக்கவெல, விமல் வீரன்வன்ச கட்சி பேச்சாளர் முஹமட் முசாமில், மேல்மாகாண முதல்வர் இசுறு தேவப்பிரிய ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் ஒன்றுபட்ட எதிரணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 

இந்த நாட்டின் பிரதான பிரச்சினைகள் யுத்தம், பயங்கரவாதம் என அடுக்கிக்கொண்டு போகாதீர்கள். இந்த யுத்தத்திற்கு மூல காரணம் உள்ளது. அது இனப்பிரச்சினை. அதுதான் முதல் பிரச்சினை. அதற்கு நாம் பதில் தேடுவோம். இந்த நாட்டுக்கு முதலில் வெளிநாட்டுகாரர்களை அழைத்து வந்ததும், ஐநா சபையில் சென்று முறையிட்டதும் தமிழர்கள் அல்ல. அதை செய்தது மகிந்த ராஜபக்ச. 1988ல் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மனிதவுரிமை காவலனாக தன்னை கட்டிக்கொண்டு, துணைக்கு வாசுதேவ நாணயக்காரவையும் அழைத்துக்கொண்டு அவர் ஜெனீவா போனார். மறந்துவிட்டதா? தெற்கில் இருந்ததுதான் முதலில் சமஷ்டி கோரிக்கை வடக்குக்கு சென்றது மறந்து விட்டதா? பண்டாரநாயக்கவை சுட்டுகொன்று முதன் முதலில் அரசியல படு கொலை கலாச்சாரம் தெற்கில்தான் ஆரம்பமானது, மறந்துவிட்டதா? அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் கலாச்சாரம் ஜேவிபியால் 1971ல் முதன்முதலாக தெற்கில்தான் ஆரம்பமானது, மறந்துவிட்டதா?

ஆகவே எல்லாவற்றுக்கும் தமிழர்களை மாத்திரம் தூற்ற வேண்டாம். இனவாத பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை தூண்டிவிட முயற்சிக்க வேண்டாம். இது சகவாழ்வு காலம். நாம் இலங்கையர் என்று முதலில் சொல்லுவோம். இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை இனத்துக்கும், மொழிக்கும், மதத்துக்கு வழங்குவோம். இதை உங்களுக்கும், சிங்கள சகோதரர்களுக்கும் நான் சொல்கிறேன்.

இதற்கு பதிலளித்த பொது எதிரணி எம்பி கெஹெலிய ரம்புக்கவெலவும், விமல் வீரன்வன்ச கட்சி பேச்சாளர் முஹமட் முசாமிலும், சிங்கள மக்களுக்கு தாம் உண்மையைதான் கூறுவதாகவும், உண்மையை எடுத்து கூறுவது இனவாதம் என்றால், தாம் இனவாதிகளாகவே இருக்க தயார் என்றும் பதில் கூறினார்கள். பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிங்கள மொழியில் நடைபெற்ற இந்த நேரடி ஒளிபரப்பு விவாதம் நள்ளிரவுவரை தொடர்ந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -