சுதந்திர கிழக்கு வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான அரசின் இராஜதந்திர நகர்வா..?



எம்.ஐ.முபாறக்-

ரசியல் தீர்வு என்ற ஒன்று வருகின்றபோது அதில் இருக்கின்ற மிகப் பெரிய சிக்கலான விடயம் வடக்கு-கிழக்கு இணைப்புத்தான்.வடக்கு-கிழக்கை இணைக்காமல் வழங்கப்படும் தீர்வு தமக்குத் தேவை இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.ஆனால்,அப்படி இணைக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது.மறுபுறம் சிங்களவர்களும் கிழக்கில் உள்ள முஸ்லிம்களும் இணைப்பை எதிர்க்கின்றனர்.

ஆட்சி மாற்றத்துக்கு வடக்கு-கிழக்கு தமிழர்கள் பெரும் பங்களிப்பு வழங்கியமைக்காகவும் தமிழரின் பிரச்சினையை இனி நீடிக்க விடக்கூடாது என்ற காரணத்துக்காகவும் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய கட்டாயத்துக்குள் இந்த அரசு தள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு முன்வைக்கப்படும் அரசியல் தீர்வு தமிழர்களின் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்கவும் வேண்டும் ஏனைய சிங்கள-முஸ்லிம் மக்களைப் பாதிக்கவும் கூடாது.அவ்வாறான ஒரு தீர்வு அமைகின்றபோதுதான் முழு நாடும் திருப்தியடையக் கூடியதாக-அரசின் ஆயுள் காலத்தை அதிகரிக்கக்கூடியதாக இருக்கும்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது வடக்கு-கிழக்கு இணைப்பு,காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அடங்கலான சமஷ்டி தீர்வே தமிழரின் பிரச்சசினைகளை முழுமையாகத் தீர்க்கும் என்று தமிழர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால்,தமிழர் தரப்பின் இந்த நிலைப்பாடானது நாட்டை இரண்டாக்கப் பிரித்து தனித் தமிழீழத்தை உருவாக்கக்கூடியது என்ற ஒரு கருத்து சிங்கள மக்கள் மத்தியில் நிலவத் தொடங்கியுள்ளது.இந்தக் கருத்தை இப்போது மஹிந்த தரப்பு சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாகப் பரப்பி வருவதால் தமிழர் கேட்பதைக் கொடுப்பதற்கு அரசு விரும்பினாலும் அது முடியாத காரியமாகவே இருக்கின்றது.

இந்தக் கருத்து ஆழமாக வேரூன்றிய நிலையில் தமிழர்கள் கேற்கும் அந்தத் தீர்வை அரசு கொடுக்குமாக இருந்தால் அரசின் இருப்புக்கே அது ஆபத்தாக அமைந்துவிடும் என்று அரசு கருதுகிறது.இதனால் மூவின மக்களும் முரண்படும் விடயங்களை நீக்கிவிட்டு பதிலுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை தீர்வுப் பொதிக்குள் உள்ளடக்குவது பற்றி அரசு யோசிக்கின்றது.

அந்த வகையில்,சிக்கலான விடயமாக இருப்பது வடக்கு-கிழக்கு இணைப்புத்தான்.இதை நிராகரித்து தமிழர்களையும் பகைத்துக்கொள்ளமுடியாது;இதை நிறைவேற்றி சிங்கள-முஸ்லிம் மக்களையும் பகைத்துக்கொள்ள முடியாது என்ற நிலையில் அரசு இருப்பதால் இந்தப் பிரச்சினையை வேறொரு விதத்தில் கையாள்வதற்கு முடிவெடுத்துள்ளது.

இணைப்புக்கு எதிரான மக்கள் குரலை கிழக்கு மண்ணில் வலுப்படுத்துவதுதான் அந்தத் திட்டம்.இதன் மூலம் வடக்கு-கிழக்கு இணைப்பு நிராகரிக்கப்படும்போது அது அரசின் முடிவல்ல கிழக்கு மக்களின் முடிவு என்றும் அந்த மக்களின் விருப்பத்தை மீறி எதையும் செய்ய முடியாது என்றும் கூறி இந்த இணைப்பைத் தவிர்ப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லிம் கட்சிகள் அரசின் இந்த ராஜதந்திர நகர்வுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிர ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் இப்போது களத்தில் குதித்துள்ளன.

''சுதந்திர கிழக்கு''என்ற பெயரில் வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதன் முதலாவது கூட்டம் கடந்த வாரம் ஏறாவூரில் நடத்தப்பட்டது.அதாவுல்லா உள்ளிட்ட மேற்படி கட்சிகளின் பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டு இணைப்புக்கு எதிராக உரையாற்றினர்.

சுதந்திர கிழக்கு என்ற தொனிப்பொருளின் கீழ் தொடர்ந்தும் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.இதுபோக,தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான தமிழ் அரசியல் புள்ளிகளையும் இந்த வேலைத் திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அறியக் கிடைக்கின்றது.

ஆகவே,இந்த விவகாரம் கிழக்கில் ஆழமாக வேரூன்றக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.அரசின் இந்த ராஜதந்திர நகர்வை முறியடிப்பதற்கு தமிழ் தரப்பு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது என்ற கேள்வி இன்று அனைவராலும் முன்வைக்கப்படுகின்றது.

வடக்கு-கிழக்கு இணைப்பை கிழக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கு காரணம் கிழக்கில் முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைந்துவிடும் என்பதாலாகும்.அவ்வாறு குறையும்போது முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரமுடியாது.முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே இருப்பதால் அந்த அரசியல் அந்தஸ்தை இழப்பதற்கு முஸ்லிம்கள் விரும்பவில்லை.இதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் வடக்கு-கிழக்கு இணைப்பை நிராகரிக்கின்றனர்.

ஆனால்,தமிழ் தேசிய கூட்டமைப்போ வடக்கு-கிழக்கை இணைத்து தமிழ்-முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஆட்சி செய்யும் ஒரு பூமியாக மாற்றுவோம்-தமிழ் பேசும் மக்களின் தாயகமாக மாற்றுவோம் என்று கூறுகின்றது.

அவ்வாறானதொரு நிலை ஏற்படும்போது இப்போது இருக்கின்ற முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்து எவ்வாறு பாதுகாக்கப்படும் என்ற கேள்வி முஸ்லிம்களின் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றது.

இந்த இணைப்பை எதிர்ப்பதற்கு முஸ்லிம்கள் முன்வைக்கும் கரணம் இதுவாக இருக்கின்றபோது சிங்களவர்கள் இதை எதிர்ப்பதற்கு வேறு காரணம் உண்டு.வடக்கு-கிழக்கு இணைப்பு நிச்சயம் தமிழீழம் என்ற தனி நாட்டின் உருவாக்கத்துக்கே இட்டுச் செல்லும் என்பதுதான் சிங்களவர்கள் கூறும் காரணமாக இருக்கின்றது.

இவ்வாறான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய பதிலை வழங்காது-இது தொடர்பில் அந்தந்த சமூகங்களுடன் பேசாது வெறுமனே வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற கோசத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைப்பது எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்று சொல்ல முடியாது.

கூட்டமைப்பின் கோரிக்கைகையை நியாயப்படுத்தி-அந்தக் கோரிக்கைகளை விளக்கி ஏனைய இனங்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறை ஒன்றை கூட்டமைப்பு இதுவரையும் தொடங்கவில்லை.

வெறுமனே கோரிக்கைகளை மாத்திரம் முன்வைத்துவிட்டு அதற்கான நியாயங்களை மக்களுக்கு விளக்கிக்கூறாமைதான் ஏனைய இனத்தவர்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்கு காரணம் என்று சொல்லலாம்.

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் தீர்வொன்று அவசியம் என்ற நிலைப்பாட்டில் இந்த நாட்டு மக்கள் அனைவரும் உள்ளனர்.அதற்காக இல்லாத பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கி புதிய பிரச்சினைகள் உருவாகிவிடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அந்த வகையில்,தமிழ் தரப்பு கேற்கும் வடக்கு-கிழக்கு இணைப்பு,காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்றும் இவை இல்லாத பிரச்சினைகளுக்காகக் கோரப்படும் தீர்வுகள் என்றும் சிங்களவர்கள் கருதுகின்றனர்.இதனால்தான் இந்தக் கோரிக்கைகளை அவர்கள் நிராகரிக்கின்றனர்.

உண்மையில் அவர்கள் அவ்வாறு கருதுவது சரியா;இந்தக் கோரிக்கை இல்லாதா பிரச்சினைகளுக்கான தீர்வா அல்லது இருக்கின்ற பிரச்சினைகளுக்கான தீர்வா என்று தமிழ் தரப்பு ஏனைய இன மக்களுக்கு விளக்கிக் கூறுவது காலத்தின் தேவையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -