ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமை எதிர்காலத்தில் இளைய தலைமுறையினர் பொறுப்பெடுத்து இந்த அமைப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமின் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்தார். சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இருபது வருடங்களுக்கு முன்னர் 24 அங்கத்தவர்களைக் கொண்டு ஆரம்பித்த அமைப்பு இப்பொழுது 800 இற்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு இன்று முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அந்தஸ்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றது. இனவாத சக்திகள் பலமுடன் இருந்தபோது இந்த அமைப்பு தன்னை அர்ப்பணித்துச் சேவையாற்றியருக்கின்றது. அரசியல்வாதிகள், ஆன்மீகத் தலைவர்களை அணுகி அவர்களை ஒன்றிணைத்து ஒருமித்த கருத்தை எட்டச் செய்து குழப்பங்களைத் தவிர்ப்பதில் துணிந்து குரல் கொடுத்திருக்கின்றது.
அலுவலகம், கொடுப்பனவு என்று எதுவுமே இல்லாமல் எல்லோரும் தொண்டர் அடிப்படையிலேயே இதனைச் செய்து வந்திருக்கின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமின் பணிகளை இனிவரும் காலங்களில் இந்த சமூகத்தின் இளைய தலைமுறையினர் பொறுப்பெடுக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு இதனைக் கையளிப்பதோடு வழிகாட்டவும் நாங்கள் என்னேரமும் தயாராக இருக்கின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் என்ற அமைப்பு உருவானதன் பின்னர்தான் முஸ்லிம் சட்டத்தரணிகள் அமைப்பு உருவானது.
இந்த சமூகத்துக்கு என்ன சமூகப் பணி செய்ய முடியும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இப்பொழுது நாட்டிலுள்ள ஏனைய 6 ஊடக அமைப்புக்களோடு நின்று பிடிக்கக் கூடிய பலமான அமைப்பாகத் திகழ்கின்றது. பத்திரிகை உரிமைச் சுதந்திரப் போராட்டம். ஊடக அடக்கு முறை, சமூகத்திற்கு இழைக்கப்படுகின்ற அநியாயங்கள் இவை பற்றி நாம் உரத்துக் குரலெழுப்பி பல விடயங்களைச் சாதித்திருக்கின்றோம். அதுபற்றியும் நாம் பெருமைப்படுகின்றறோம். இந்த நாடம்டில் டிப்ளோமா இன் ஜேர்னலிஸ்ம் என்கின்ற ஊடகக் கற்கை நெறி முஸ்லிம் மீடியா போரமின் வேண்டுகோளின் பேரில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதிலும் நாம் பெருமை கொள்ள முடியும். அது இன்று வியாபித்து நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் ஒரு கற்கை நெறியாக உள்ளது.
நாம் அன்று குரல் கொடுத்ததன் விளைவாகத்தான் இன்று பெயருக்குப் பின்னால் டிப்ளோமா இன் ஜேர்னலிஸ்ம் என்கின்ற பெருமையைச் சேர்த்துக் கொள்வதற்கு முடிந்திருக்கின்றது. இந்தக் கற்கை நெறியைத் தொடர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களையும் நாம் வழங்கி அவர்களை ஊக்குவித்தோம். நாம் முன் வைத்த முயற்சியின் காரணமாக இப்பொழுது 600 பேர் ஊடகவியல் டிப்ளோமா கற்கையை முடித்திருக்கின்றார்கள். நலன்புரி சேவைகளையும் எல்லா சமூகத்திற்கும் செய்திருக்கின்றோம். உயர் கல்விக்கு உதவியிருக்கின்றோம். இப்பொழுது இந்த சமூகத்திற்காக குரல் கொடுக்க நாளாந்த வாராந்தப் பத்திரிகைகளும், மாதாந்த சஞ்சிகைகளும், இணையத் தளங்களும் உருவாகி இருக்கின்றன. ஒரு காலத்திலே எங்களடைய சமூகப் பிரச்சினைகளை வெளியில் கொண்டு செல்ல ஒரு ஊடகம் கூட இல்லாத பரிதாப நிலையிருந்தது.
இவை அனைத்தும் இருந்தாலும் இன்னமும் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. எமது கருத்துக்களை சமூகத்தின் குரலை தேசிய மட்டத்தில் கொண்டு செல்வதற்கு உள்ளுர் மொழியான சிங்களத்திலும், சர்வதேச மட்டத்தில் ஆங்கிலத்திலும் கொண்டு செல்வதற்கு பத்திரிகைகள் தேவையாக உள்ளது.
இது பற்றி ஒட்டு மொத்த இந்த சமூகத்தின் தனவந்தர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள். ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் எல்லோருமே சிந்திக்க வேண்டும்' என்றார்.