ஹம்பாந்தோட்டை துறைமுகத்துடன் தொடர்புடைய நிதி மோசடி சம்பவம் குறித்து பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த பந்துவிக்ரம மற்றும் நடிகர் ஜெக்ஷன் அண்டனி ஆகிய இருவரும் இன்று (23) ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இதற்கு முன்னரும் இவர்கள் இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக அந்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட தேவைகளுக்காக இலங்கை விமானப் படையின் விமானங்களை பயன்படுத்திக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் அதன் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.