சவுதி அரேபியாவில் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சடலம் தொடர்பில் மர்மம் நிலவுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதியில் சாரதியாக பணியாற்றிய நிலையில் திடீரென உயிரிழந்த இலங்கையர், நாட்டுக்கு சடலமாக கொண்டு வரப்பட்டுள்ளார். எனினும் அந்த உடலை பிரேத பரிசோதனை உட்படுத்த நீர்கொழும்பு பிரதான சட்ட வைத்தியர் எம்.என்.ராகுல் ஹக் நிராகரித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய, பனாமுர எத்கால பிரதேசத்தில் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இந்த சாரதி, இதுவரை இலங்கையினுள் கண்டுபிடிக்கப்படாத ஆபத்தானதாக கருதப்படும் வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளமையே இதற்கு காரணமாகும். உடலை சவப்பெட்டிக்கு வைத்து சீல் வைத்து அனுப்பப்பட்டுள்ளதுடன், சீலை உடைத்து பெட்டியை திறந்தால் இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கான ஆபத்து உள்ளதாக பெட்டியில் தகவல் ஒன்றும் வைத்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உடல் தொடர்பில் பிரேத பரிசோதனை இடம்பெற வாய்ப்புகள் உள்ளமையினால், பிரதேச பரிசோதனையை மேற்கொள்வதனை நிராகரித்தமை தொடர்பில் வைத்தியர் ராகுல் ஹக்கினால் நீர்கொழும்பு திடீர் மரண பரிசோதகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பாரிய வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமை சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள வைத்திய அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்து நபரின் உடலில் இருந்து வைரஸ் வெளியேறாத வகையில் சவப்பெட்டியை திறக்காமல் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே புதைக்க வேண்டும் என பிரதான வைத்தியர் பரிந்துரை செய்துள்ளார். ஏற்பட்டுள்ள ஆபத்து தொடர்பில் உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் தெளிவுபடுத்தியுள்ள வைத்தியர், சவப்பெட்டியை திறக்காமல் புதைக்குமாறு வழங்கிய ஆலோசனைக்கு உறவினர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் உயிரிழந்த சாரதியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வைத்தியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் வரையில், நீதிமன்ற அனுமதியுடன், நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிணவறையில் பாதுகாப்பாக உடல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.