ஏ.எம்.றிகாஸ்-
ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகளது ஜனாஸாக்கள் பல்லாயிரக்கணக்கான மக்களது கண்ணீருடன் 13.09.2016 இரவு 9 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதையடுத்து இக்கொலையினைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் பொலிஸாருக்கு உதவவேண்டுமெனக் கோரியும் கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.
ஏறாவூர்- முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெசீரா பாணு மாஹிர் ஆகியோர் பொல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இந்த ஜனாஸாக்கள் மீதான பிரேத பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதையடுத்து நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஏறாவூர்- நூறுஸ்ஸலாம் பள்ளிவாயல் பொதுமையவாடியில் நடைபெற்ற நல்லடக்க நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஏறாவூரின் அண்மைக்கால வரலாற்றில் மிகக் கூடுதலான மக்கள் பங்கேற்ற நல்லடக்க நிகழ்வு இதுவென குறிப்பிடப்படுகிறது. இங்கு விஷேட பிரார்த்தனையும் நடைபெற்றது. இதேவேளை இக்கொடுரக்கொலையைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களைக் கோரியும் ஏறாவூர்- சமூகசேவைகள் அமைப்பு, பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
இவர்கள் சுலோகங்களையும் ஏந்திநின்றனர். இதேசமயம் இக்கொலையினைக் கண்டித்தும் துக்கம் அனுஷ்டிக்கும் முகமாகவும் ஏறாவூர்;ப் பிரதேசத்திலுள்ள தெருக்கடைகளில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மணிக்கூண்டு கோபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 'கண்Pருடன் ஏறாவூர்' 'ஆழ்ந்த துயரத்தில் ஏரூர்' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.
இக்கொலைச் சம்பவம் இடம்பெற்ற நாள்முதல் ஏறாவூர்ப் பிரதேசம் சோகமயமாய் காட்சியளிப்பதாக எமது பிரதேச செய்தியாளர் அறிவித்துள்ளார்.