பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காத்திரமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளுள் காணாமல்போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினையும் மிக முக்கிய ஒன்றாகும். இது தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும். விசேடமாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி நீண்டகாலமாக பலர் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது நிபந்தனைகளின் அடிப்படையிலோ விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, சிறைகளில் வாழ்கின்ற இளைஞர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பலரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற அடிப்படையில் அம் மக்கள் படும் துன்பங்கள் நன்கு அறிந்தவன். இதனால் நான் பல்வேறு சந்தர்பங்களில் இவ்விடயம் தொடர்பில் அழுத்தம் - திருத்தமாக பேசியுள்ளேன்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் இன்று மன்னிக்கப்பட்டு அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், அசாதாரன சூழலில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி சகோதரர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற ஒன்றாகும் என்பதுடன் அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஆகவே, இன்று யுத்தம் முடிவடைந்துள்ளது. நாட்டில்அமைதி சமாதானம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒற்றுமையான சமாதானமான அமைதியான சூழலில் கடந்த கால யுத்த சூழலில் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற அத்தனை இளைஞர்களும் உடனடியாக ஏதோ ஒரு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.