என்.எம்.அப்துல்லாஹ்-
2016 செப்டம்பர் 02 அன்று தனது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் அதனது தவிசாளர் அப்துல் றமீஸ் அவர்களும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களும் வடக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் சந்தித்து வடக்கு முஸ்லிம் மக்கள் தொடர்பிலான கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றினைக் கையளித்திருந்தார்கள். மேற்படி ஆவணம் “தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வுக்கான செயற்திட்டத்தில்; யாழ், கிளிநொச்சி முஸ்லிம் மக்கள்; உள்ளீர்க்கப்பட வேண்டியதற்கான நியாயப்பாடுகள்; உபாய மார்க்கங்கள்” என்னும் தலைப்பைத் தாங்கியிருந்தது. அதிலே பின்வரும் பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வடக்கு முஸ்லிம்களுடைய விவகாரங்கள்; இதுவரை உள்ளூர், தேசிய, சர்வதேசிய கருத்தியல் தளங்களிலும், சமூக அரசியல் தளங்களிலும் போதுமான கவனயீர்ப்பை வேண்டிநிற்கின்றது. மன்னார். முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் ரீதியான பெரும் பலத்தை உடையவர்கள் அல்ல; எனவே அவர்கள் தம்முடைய கருத்துக்களை சிவில் சமூகத்தினரூடாக முஸ்லிம் மக்களுடனும், முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனும்; தமிழ் மக்களுடனும் தமிழ் அரசியல் தலைவர்களுடனும்; தேசிய ரீதியான அரசியல் தலைவர்களுடனும்; சர்வதேச சமூகத்தவரோடும் பரிமாறிக்கொள்ள வேண்டிய பாரிய தேவையினை அண்மைக்காலமாக உணர்ந்துவருகின்றார்கள், அதன் ஒரு முயற்சியாகவே எமது மக்களின் அடிப்படையான பிரச்சினைகள் குறித்த ஆவணமொன்றினை தங்களுக்குக் கையளிக்கின்றோம்.
வடக்கு மண்ணில் போர் ஓய்ந்திருக்கின்றது, அச்சம் குறைந்த சூழல் ஏற்பட்டிருக்கின்றது, ஜனநாயக சூழல் மெதுமெதுவாக ஏற்படுகின்றது; தமிழ் மக்கள் இது நாள்வரை எதிர்நோக்கிய அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஜன்நாயக வழிமுறைகளில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் தமிழ்த் தலைமைகளும் இலங்கை அரசாங்கமும், சர்வதேச சமூகமும் நம்பிக்கைதருகின்ற நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றன; இவ்வாறான சூழ்நிலையில்; நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகள், உண்மையைக் கண்டறிதல், இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுத்தல் குறித்து அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சமகாலத்தில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கவனம் செலுத்தப்படவேண்டிய மற்றொரு மக்கள் தரப்பாக “வடக்கு முஸ்லிம் மக்கள்” இருக்கின்றார்கள்.
அவர்கள் தமது பூர்வீக வாழிடங்களை நோக்கித் திரும்புதல் அவசியமாகும், அதற்கான ஏற்பாடுகள்; குறித்த பிரதேசத்தின் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாலும், அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்படவேண்டும். வெளியேற்றப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வை உறுதி செய்வதற்கு எதுவெல்லாம் அவசியபப்டுகின்றதோ அவற்றையெல்லாம் முன்னெடுப்பதுவே அவர்களுக்கான மீள்குடியேற்ற செயற்திட்டமாக இருக்க முடியும். மீள்குடியேற்றம் என்பது பின்வரும் மூன்று விடயங்களை உள்ளடக்கியதாக இருத்தல் அவசியமாகும், மீள் உரிமை கோருதல்; மீளத்திரும்புதல்; மீளக்கட்டியமைத்தல்.
அடுத்து அந்த மக்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, சிறுபான்மை சமூகம் என்ற நிலையில் அரசியல் ரீதியான பங்கேற்பு, சமூக கலாசார விவகாரங்கள் போன்ற விடயங்கள் அரசியலமைப்பு ரீதியாக உறுதி செய்யப்படுதல் வேண்டும். இரண்டு சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லிணக்கம்; மற்றும் சகவாழ்வு குறித்து சிந்திப்பதும், பொறுத்தமான செயன்முறைகளை முன்னெடுப்பதும் அவசியமாகின்றது. “மீள்நிகழாமை” என்பதை வலியுறுத்தும் சமூக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும்.
ஆகிய பிரதான விடயங்களில் கவனங்கள் செலுத்தப்படவேண்டியிருக்கின்றது, இவர்களின் விவகாரங்களை தமிழ் மக்களுக்கான தீர்வுகளுக்குச் சமாந்தரமாக கையாள்கின்ற சூழலை தற்போதைய பொறிமுறைகளோடு இணைந்ததாக மேற்கொள்வதற்கு தாங்கள் கவனம் செலுத்த வேண்டும், இந்த இடத்திலே வடக்கு முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தை நாம் உங்களிடமிருந்து எதிர்பார்த்து நிற்கின்றோம். இதனை தமிழ் மக்களின் தலைவர்களோடும், இந்த நாட்டின் அரசாங்கத்தோடும் தாங்கள் கருத்தாடுகின்றபோது முன்வைக்கவேண்டும் என்பதும் எமது வேண்டுகோலும் எதிர்பார்ப்புமாக இருக்கின்றது. என்றும் குறித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.