ஹைதர் அலி-
இயற்கை வளங்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுக்களை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது பொறுப்பின் கீழ் வைத்து மக்கள் பாதுகாப்பு தொடர்பான விடயங்களிலே மிகவும் அக்கறையோடு செயற்பட்டு வருகின்றார் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக தேசிய கரையோர கடல் வளங்களை பாதுகாக்கும் வாரம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை அனைத்து கரையோர மாவட்டங்களிலும் அமைச்சு, திணைக்களம், மாகாண மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், முப்படைகள், பொலிஸ், அரசசார்பற்ற நிறுவனங்கள் அடங்கலாக சிவில் அமைப்பு மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைவாக இன்று (செப்டம்பர் 21ஆம் திகதி 2016) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தேசிய கரையோர தூய்மைப்படுத்தல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபை (மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு) ஏற்பாட்டில் காத்தான்குடி நகரசபை இணைந்து காத்தான்குடி கடற்கரை கரையோரங்களை துப்பரவு செய்யும் பணி இன்று காலை காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபையின் செயலாளர் ஸபி, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினுடைய அதிகாரி மைக்கல், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அப்கர், காத்தான்குடி பிரதேச செயலக மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர் கரையோர வளங்களின் பாதுகாப்பு என்பது மிகவும் பிரதானமானது. அதன் ஒரு கட்டமாகவே இன்று இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாம் இந்த கடற்கரை வீதியினை அமைக்கின்றபோது கூட இந்த வீதினை அகலப்படுத்திகின்ற போது எமது கரையோரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்பது பற்றி மிகவும் சிந்தித்து புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டு வருகின்றோம். ஏனெனில் காத்தான்குடியினை பொறுத்தவரை எமது மக்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தினை கழிக்கின்ற ஒரே பிரதான இடம் கடற்கரையாகும்.
எனவே இப்பகுதியினை பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டியது எமது கடமை. இங்கு வந்து ஒய்வெடுப்பவர்கள் தமது குப்பைகளை ஒரு பையிலே எடுத்து சென்று அதனை உரிய முறையில் அப்புறப்படுத்தும் நடைமுறை உருவாக வேண்டும். இந்த குப்பைகள் கடலினுள் சேரும் போது கடல் வள உயிரினங்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றது.
மேலும் கரையோர பாதிப்பு பற்றி சிந்திக்கும் போது கரையோரங்களின் ஊடாக மனித உயிர்கள் எதிர்கொண்டுள்ள ஆபாயங்கலிலிருந்து பாதுகாப்பான முறையில் நடந்து கொள்வது பற்றியும் அதிகம் கவனமெடுக்க வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் கல்குடா பாசிக்குடா கடலிலே நீராட சென்ற இரு சகோதர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததோடு அந்த துயரத்தினால் அவர்களின் பெற்றோர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றது. எமது ஊரில் கூட கடந்த காலங்களில் கடலில் நீராட சென்று அதிக மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறன உயிரிழப்புகளை தடுப்பதற்காக எச்சரிக்கை பலகைகளை இடவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் நாம் கேட்ட போது எமது வேண்டுகோளுக்கமைய அந்த எச்சரிக்கை பதாதைகளை இடுவதற்கு நடவடிக்கை எடுத்த கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினுடைய அதிகாரி மைக்கல் அவர்களுக்கும் நான் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.