அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில், அஷ்ரப் நகர் கிராமத்தில் இன்னும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இக்கிராம மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலோ அல்லது அவர்களது கோரிக்கைகளுக்கேற்ப மாற்றுக் காணிகளை வழங்குவது தொடர்பிலோ ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.
அஷ்ரப் நகரில் வாழ்ந்த 69 முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமான காணியை சுவீகரித்து இராணுவத்தினர் கையகப்படுத்தியமைக்கு எதிராக அகமது லெப்பை கதீஜா உம்மா என்பவரால் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த போதே நீதியரசர்களான சிசிர ஜே. டி ஆப்ரூ, அனில் குணவர்தன மற்றும் பிரசன்ன எஸ். ஜயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துடன் இவ் வழக்கை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கும் ஒத்திவைத்தது.
இதன்போது கருத்து வெளியிட்ட அரச தரப்புச் சட்டத்தரணி, மனுதாரரான கதீஜா உம்மாவுக்கு பிறிதொரு இடத்தில் குடியிருப்பதற்கான வீட்டினையும் காணியையும் வழங்க முடியும் என்று தெரிவித்தார்.
எனினும் இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதன்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன நீண்ட காலமாக இக் காணிகளை விடுவிக்காது இழுத்தடிக்கப்படுவது தொடர்பிலும் அங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கதீஜா உம்மாவுக்கு அவர் ஏற்கனவே வாழ்ந்த இடத்தில் அவருக்குரிய காணியை வழங்குவதுடன் இடிக்கப்பட்ட அவரது வீட்டையும் கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும் இன்றேல் வீடு , கிணறுடன் கூடிய விவசாயம் செய்யக்கூடிய இரண்டு ரூட் காணியை வழங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இக் கிராமத்திலுள்ள ஒரு பகுதி காணியில் வன இலாகா திணைக்களத்தினால் இராணுவத்தினரின் உதவியுடன் தேக்கு மரம் பயிரிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் சுட்டிக்காட்டி அதற்கு தமது எதிர்ப்பினையும் வெளியிட்டார்.
இதன்போதே அரச தரப்பு சட்டத்தரணியை நோக்கி இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ள போதிலும் இன்னும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பது ஏன் என நீதியரசர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த விடயம் தொடர்பில் மனுதாரரின் கோரிக்கையை கருத்திற் கொள்ளுமாறும் இராணுவ பிரசன்னம் இருப்பது தொடர்பிலும் ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிக்கு உத்தரவிட்ட நீதியரசர் குழாம் இவ் வழக்கை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கும் ஒத்திவைத்தது.