தமிழ் தலைமைகள் சோரம் போகாததால் துணிந்தும் முஸ்லிம் தலைமைகள் குணிந்தும் நிற்கிறார்கள்..!

அஹமட் புர்ஹான் -
ம் முஸ்லிம் பிரதிநிதிகள் ஒருகாலத்தில் பெரும்பாண்மை கட்சிகளோடு இணைந்து இனக்க அரசியல் செய்தார்கள். அதனால் அன்று எந்த கட்சி ஆட்சி அமைக்கின்றதோ அந்த கட்சியில் வெற்றியடையும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர்தான் முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் தலைவராக செயல்பட்டு சில நன்மைகளை முஸ்லிம் சமூகத்துக்கு பெற்றுக்கொடுத்த வரலாறுகளும் இருந்து வந்தது. அப்படி இனக்க அரசியல் மூலம் சில நன்மைகளை நாம் பெற்று வந்தாலும் சில சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேரம் பேசி பெரும் அளவுக்கு அன்று இருந்த முஸ்லிம் பிரதிநிதிகளால் முடியாமல் போனது என்பதும் உண்மையாகவே இருந்தது.

இந்த காலப்பகுதியில்தான் நாம் தமிழ் ஆயுததாரிகளினால் பல இன்னல்களை சந்தித்தபோது நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை பற்றி பேசுவதற்கே தயங்கினார்கள். காரணம் நாம் அதனைபற்றி பேசி தீர்வை பெற முயற்சித்தால் தான் சார்ந்திருக்கும் கட்சியை பாதித்து விடலாம் என்ற என்னமும்,ஒரு வேளை இதனால் பெரும்பான்மை கட்சியின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோம் என்ற காரணத்தினாலும் அவர்கள் வாய் திறக்கவே பயந்திருந்தனர். இதனால்
அவர்கள் ஒரு சூழ்நிலை கைதியாகவே மாட்டிக்கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.

அந்த காலப்பகுதியில்தான் மர்ஹும் அஸ்ரப் அவர்களும், சேகு இஸ்ஸடீன் போன்றவர்களும் இணைந்து, யாருக்கும் சோரம்போகாத, யாருக்கும் அடிமையாகாத முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தனித்துவமாக நின்று குறல் கொடுத்து தீர்வை பெறுவதற்கு ஒரு தனிக்கட்சியின் தேவை அறிந்துதான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை 1986ம் ஆண்டு ஆரம்பித்தனர். தனிக்கட்சி ஆரம்பித்ததில் நன்மைகளும் அதே நேரம் சில தீமைகளும் இருந்தன என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இருந்தாலும அந்த கட்சி ஆரம்பிக்கும்போது பல எதிர்ப்புக்களையும், கண்டனங்களையும் சந்தித்தது. இருந்தாலும், அஸ்ரப் இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது சுதந்திரமாக இயங்கி, முஸ்லிம்களின் உரிமையை பெற்றுக்கொள்வோம் என்ற உறுதிப்பாட்டை கோசமாக வைத்துத்தான் முஸ்லிம் மக்களின் வாக்குகளை வேட்டையாடி தனிப்பெரும் கட்சியாக வளர்த்தெடுத்தார்..

அதன்காரணமாக காலப்போக்கில் அரசாங்கத்தை அமைக்கும் பங்காளிக்கட்சியாகவும், பேரம் பேசும் சக்தியாகவும் மாறிய வரலாறுகளும் நடந்திருந்தாலும், ஆட்சி அமைக்கும் வரை இவர்களை பயன்படுத்திவிட்டு பிறகு ஏமாற்றிய வரலாறுகளும் உண்டு. அதனால் பல இன்னல்களை அஸ்ரப்புடைய கட்சி சந்தித்தது என்பதும் உண்மையாகும். எப்படி இருந்தாலும் இவருகளுடைய பலவீனத்தை பயன் படுத்தி இவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து ஒருவகையான சூழ்நிலை கைதிகளாக இவர்களை வைத்திருப்பதில் சிங்கள தலைவர்கள் வெற்றியடைந்தார்கள். அதன் காரணமாக நமது முஸ்லிம் தலைமைகள், (ஈனவும் முடியாமல் நக்கவும் முடியாமல்) மாட்டிக்கொண்டு தினறிய விடயங்களும் நடந்துள்ளன.

அரசாங்கங்களுடன் இணையும் இவர்கள் அதனூடாக பல பதவி பட்டங்ககளை பெற்று தங்களுக்கும்,தங்களுடைய ஆதரவாளர்களுக்கும் பல பதவிகளையும் பட்டங்களையும் பெற்று கட்சியின் கொள்கைக்கு மாற்றமாக வேறு திசையில் பயணித்து சென்று அவர்களும் பெரும்பான்மை கட்சிகளிடம் சூழ்நிலை கைதியாக மாட்டிக்கொண்ட வரலாறுகள்தான் நடந்து கொண்டுள்ளது. அஸ்ரப் அவர்களின் மரணத்துக்கு பிறகு முஸ்லிம் காங்கிரஸுக்கு தலைமையேற்ற ரவூப் ஹக்கீம் அவர்கள் கட்சியை வழிநடத்த தனக்கென்று ஒரு போராளிக்கூட்டத்தை உருவாக்கி கொள்ளவேண்டிய கட்டத்துக்கு ஆளானார்.

அதனால் பெரும்பாண்மை அரசாங்கங்களோடு இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று அவரும் அவருடைய ஆதரவாளர்களையும் திருப்திபடுத்தும் நோக்கத்துக்காக. ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை சமூக கட்சிகளிடம் சோரம் போகும் விடயங்களைத்தான் அவரும் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார். இந்த கட்சியோடு சில காரணங்களை கூறி பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பித்தவர்களும்,தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் பலமான ஒரு ஆதரவாளர் கூட்டத்தை தக்கவைத்து கொள்வதற்காகவும், ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களோடு இணைந்து தனக்கும், தன்னுடை ஆதரவாளர்களுக்கும் பதவி பட்டங்களை பெற்றுக்கொடுப்பதே அவர்களுக்கு முதல் தேவையாக இருந்தது. அதனால் அவர்களும் சூழ்நிலை கைதியாக சிங்கள அரசாங்கங்களிடம் மாட்டிக்கொண்டுள்ளார்கள் என்பதை கவனிக்கக் கூடியதாக உள்ளது.

இப்படி பதவி பட்டங்களை தக்கவைத்தால்தான் தனது கட்சியையும்,தனது ஆதரவாளர்களையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியும். இல்லாது விட்டால் மற்ற எதிராளி கட்சியினால் நாம் துவம்சம் செய்யப்பட்டு விடுவோம் என்ற பயத்தினால்தான் இந்த கட்சி தலைவர்கள் தன்னுடைய கொள்கைகளை மறந்து பெரும்பான்மை கட்சிகளிடம் அடிமைப்பட்டும்,சோரம் போயும் கிடப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவர்களுடைய பலவீனங்களை அறிந்து கொண்ட ஆட்சியமைக்கும் அரசாங்கங்கள் இவர்களுக்கு (நாய்க்கு எழும்புத்துண்டை போட்டு கொள்ளைக்காரன் கொள்ளையடிப்பதை போல்) பதவிகளை கொடுத்து இவர்களின் வாய்களை அடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்படி மாட்டிக்கொண்டவர்கள் முஸ்லிம் சமூகத்துக்காக தங்கள் பதவிகளை இழக்கவிரும்ப மாட்டார்கள். அப்படி பதவிகளை தூக்கி எறிந்து வெளியேறினால் தங்களுடைய அமைச்சினூடாக பயன் பெரும் அத்தனை ஆதரவாளர்களின் பதவிகளுக்கும், தனக்கும்,தனது கட்சிக்கும் ஆபத்தாக வந்துமுடியும்.என்ற காரணத்தினாலும், அப்படி நடந்தால் நமது கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்த ஆதரவாளர்கள் கூட்டம் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தினாலும் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையை தூக்கிபிடிக்க முன்நிற்க தயக்கம் காட்டுவதும் உண்மையாகும்.

இப்படியான பிரச்சினைகள் வரும் என்று தெரிந்துதான் தமிழ் தலைவர்கள் எந்த பதவி பட்டங்களையும் பெறாமல், தன்னுடைய இனத்துக்காக சுதந்திரமாக போராடுகின்றார்கள். அதனால்தான் யாருக்கும் தலைகுனியாமல் அவர்களுடைய பிரச்சினைகளை பேசுவதற்கு அவர்கள் தயங்குவதும் கிடையாது. அவர்களும் இவர்களை போல் பதவி பட்டத்துக்கு ஆசைப்பட்டால், அதனை தாராளமாக சிங்கள அரசாங்கம் வழங்கி அவர்களின் வாயை அடைக்க வெகுகாலம் தேவைப்படாது. அதனால்தான் அன்று ரீவி நிகழ்ச்சியில் பேசிய சம்பந்தன் ஐயா கூறினார் முஸ்லிம் தலைவர்கள் பதவிக்காக தனது சமூகத்தை காட்டிக்கொடுக்கின்றார்கள் என்று கூறினார்.

இந்த நிலை வருவதற்கு முஸ்லிம் சமூகமும் ஒருவகையில் காரணமாக இருப்பதும் வேதனையான விடயமாகும். தான் சார்ந்திருக்கும் கட்சிகளிடம் தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை சாதிப்பதற்காக,அவர்கள் என்ன தவறு செய்தாலும் தட்டிக்கேட்க நாதியற்று கிடக்கின்றனர். இந்த கட்சி சார்ந்த ஆதரவாளர்களும்,பொதுமக்களும் எங்களுக்கு தறாது விட்டாலும் சமூகத்துக்காக போராடுங்கள் என்று ஊக்கப்படுத்துவதை காணமுடிவதில்லை... தன்ட தன்ட சுயநலத்துக்காக கட்சிக்கு வேலை செய்யும் இளம் சமூதாயம் திருந்தி, பொதுநல நோக்கோடு சிந்தித்து கட்சிகளுக்கு உதவி செய்யும் தொண்டர்கள் உருவாகும் வரை இந்த தலைமைகளும் திருந்த போவதுமில்லை. முஸ்லிம் சமூகத்துக்கு விடிவு கிடைக்கப்போவதுமில்லை..
இதுதான் நிஜம்.....

ஆக்கம்:- எம்.எச்.எம்.இப்ராஹீம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -