முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித்த ராஜபக்சவிற்கு சொந்தமான சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை எடுத்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு வழங்கிய இந்த நிலத்தின் குத்தகை பத்திரமும் ரத்து செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் உள்ள ஏனைய சொத்துக்கள் மற்றும் கட்டிடங்கள் என்பன அரசுடமையாக்கப்படும் என்று நிதி மோசடி விசாரணை பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீடு ஒன்றை அரசு உடமையாக்குவதற்கு அனுமதி தருமாறு நிதி மோசடி விசாரணை பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பஹா மாவட்டம், மல்வான பகுதியில் உள்ள பசிலுக்கு சொந்தமான குறித்த வீடே இவ்வாறு அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு தொடர்பில் பசில் ராஜபக்சவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் முன்னதாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பசில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.இதேவேளை பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான கடுவல மற்றும் மாத்தறையில் உள்ள Brown’s Hil போன்ற சொத்துக்களையும் அரசுடமையாக்குவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.