ரணவிரு ரியல் ஸ்டார் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் முதலிடங்களைப்பெற்ற வெற்றியாளர்கள் இரண்டு பேர்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
ரணவிரு ரியல் ஸ்டார் இரண்டாம் கட்டத்தில் முதலிடத்தைப்பெற்ற இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் அயோமி பெரேரா மற்றும் மூன்றாம் கட்டத்தில் முதலிடத்தைப்பெற்ற விமானப் படையைச் சேர்ந்த துஷானி பெரேரா ஆகியோருக்கான வீட்டு உரிமைப்பத்திரங்களை ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
ரணவிரு ரியல் ஸ்டார் நான்காவது கட்டம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள போட்டியாளர்களுக்கு அவர்களது இரசிகர்கள் வழங்கியுள்ள வாக்குகளின் மூலம் கிடைக்கப்பெற்ற 15.5 மில்லியன் ரூபாவினை நிதியமைச்சின் நலனோம்புகை நிதியத்திற்கு வழங்குவதற்கு டயலொக் ஆசியாட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்ததோடு, அதற்கான காசோலையை அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஹான்ஸ் விஜசூரிய அவர்களினால் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.
ஐந்தாம் கட்டத்தின் முதலாம் இடத்திற்கான கிண்ணமும் அடையாளமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பாதுகாப்புத் துறையிலுள்ள உறுப்பினர்களின் இசைத்திறமைகளை உரசிப்பர்க்கும் ரணவிரு ரியல் ஸ்டார் நிகழ்ச்சித்திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில் தெரிவாகும் உறுப்பினர்கள் 30 பேர்களுக்கும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி எயார் மார்ஷல் கோலித குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீன்திர விஜேகுணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்கள ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.