சமகாலத்தில் ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு எதிராக கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்காக ரெஜிமென்டின் உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் அதற்கு இணைவாக கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய ஒப்பிரேஷன் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முறைகேடாக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளை அரச உடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், சில காணிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மஹிந்தவின் இளைய புதல்வருக்கு சொந்தமான சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தை அரச உடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அரச சொத்துக்களை தவறான பயன்படுத்தியமை, பணம் தூய்மையாக்கல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உட்பட குற்றச்சாட்டுகளை உறுதி செய்துக் கொண்டதன் பின்னர் சீ.எஸ்.என் தொலைக்காட்சி மற்றும் அதற்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான ஆவணங்களை, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்தவுடன் உடனடியாக குறித்த ஊடகம் மற்றும் அதற்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என நிதி மோசடி விசாரணை பிரிவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி 142163 என்ற இலக்கத்தின் கீழ் பதிவு செய்து ஆரம்பிக்கப்பட்டுள்ள சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆரம்ப விலாசமாக இலக்கம் 260/12 டொரிங்டன் எவநிவ், கொழும்பு 5 என்ற விலாசமே குறிப்பிடப்பட்டிருந்தன.
அதன் ஆரம்ப இயக்குனர்களாக சசித்ர கவிஷான் திஸாநாயக்க, அஷான் ரபிநாத் பெர்ணான்டோ, சாக்யா கருணாஜீவ, ரோஹான் வெலிவிட்ட ஆகியோர் செயற்பட்டுள்ளனர். சீ.எஸ்.என் தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்காக 2000 இலட்சம் ரூபா கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் குறித்த கடன் பணம் எவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் உறுதி செய்வதற்கு அதன் அதிகாரிகள் தவறியுள்ளனர்.
இந்த நிலையில் சீ.எஸ்.என் தொலைக்காட்சி யோஷித ராஜபக்சவினால் CSN பெயரளவு இயக்குனர் வாரியத்தின் கீழ் நடத்தி செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு கண்டுபிடித்துள்ளது. யோஷித ராஜபக்ச சீ.எஸ்.என் தலைவராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் அதன் நிறைவேற்று அதிகாரியாக பிரியந்த அபேரத்ன என்பவர் செயற்பட்டுள்ளார். அவர் அப்போதைய டெலிகொம் நிறுவனத்தின் பொது ஒழுங்குமுறை அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் மேலாண்மை நடவடிக்கைகளை துசித ஜயவர்தன மேற்கொண்டுள்ள அதே சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்தின் அபிவிருத்தி அதிகாரியாகவும் சம்பளம் பெற்று வந்துள்ளார். குறித்த அனைத்து விடயங்களையும் நிரூபித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு 130 பக்கத்திலான அறிக்கை ஒன்றை அரசாங்க சட்டமா அதிபரிடம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.