மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள சமூகசேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனமானது இப்பிரதேசத்தில் பல தரப்பட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருவதோடு, குறிப்பிடத்தக்க சில சமூகப்பணிகளை வெளி மாவட்டங்களிலும் இந்நிறுவனம் செயற்படுத்தி வருகின்றது.
இந்நிறுவனத்தின் கல்விப்பிரிவானது பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு விடயங்களில் கவனம்செலுத்தி வருவதோடு, மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கணித, விஞ்ஞானப்பிரிவுகளில் கல்வி கற்கும் வறிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் பல வகையிலும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன, மத பேதமின்றி கல்வி கற்கும் மாணவர்களுக்கு தன்னாலான பலதரப்பட்ட உதவிகளை வழங்கி மாணவர்களின் கல்வி விடயத்தில் மிகவும் கறிசனை காட்டிவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக தனது சொந்த நிதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு மாதாந்தோறும் 5000 ரூபா வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.
அதற்கமைவாக முதற்கட்ட நிதியானது 2016.02.15ஆந்திகதி மாகாண சபை உறுப்பினர் சார்பாக அவரது ஊடக இணைப்பார் ஹைதர் அலி அவர்களினால் பாடசாலை அதிபரிடம் 25000 ரூபா கையளிக்கப்பட்டது. அதன் தொடரின் இரண்டாம் கட்ட நிதியாக 35000 ரூபா 2016.09.06ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) அதிபர் காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்நிதியானது, மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். அபுல்ஹசன் மற்றும் மீராவோடை கல்வி அபிவிருத்தி வட்டத்தின் தலைவரும், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரும் மற்றும் பிரதி அதிபருமான ஏ.எம். அன்வர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினருமான கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் எம்.பீ.எம். சனூஸ் ஆகியோரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ. ஷிப்லி பாறுக், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளரும், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் உறுப்பினர்களான ஜனாப். எம்.ஆர். உசைத் மற்றும் எஸ்.எம். சிம்ஸான் ஆகியேரினால் கையளிக்கப்பட்டது.
மேலும், பாடசாலையின் ஏனைய தேவைப்பாடுகள், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் பல தேவைகள் தொடர்பாக பாடசாலை அதிபரினால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை அனைத்தையும் கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தன்னாலான விடயங்களை இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். மேலும் இப்பாடசாலைக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவருமான கே.பீ.எஸ். ஹமீட் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இப்பாடசாலைக்கு 35 இலட்சம் ரூபா மாகாண சபையினால் நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.