எம்.ஜே.எம்.சஜீத்-
ஏறாவூர் பிரதேசத்திலே அதிகமான அபிவிருத்திப் பணிகளை செய்த பெருமை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவையே சாரும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார். ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் (30) பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
எமது ஏறாவூர் பிரதேசத்திலே அதிகமான அபிவிருத்திப் பணிகளைச் செய்தவர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவே ஆகும். யுத்தத்தினால் அழிந்துபோன இந்தப்பிரதேசத்தினுடைய உட்கட்டுமானம், வாழ்வாதாரம், மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை இந்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதிலே அமைச்சர் ஹிஸ்புல்லா அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவர். அவர் ஆற்றிய பணிகளை ஏறாவூர் சமூகம் ஒருபோதும் மறந்விதுட முடியாது.
குறிப்பாக இப்பிரதேச மக்களின் நலன் கருதி ஹிஸ்புல்லா கிராமம், முகாஜிரீன் கிராமம், அப்துல் மஜீட் புரம், தபால் காரியாலயம், மீனவத்திட்டம், குடிநீர் வழங்கல், வாழ்வாதார உதவி என பலவழிகளிலும் அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் இப்பிரதேசம் அபிவிருத்தியடைந்துள்ளது. அதற்காக நாம் நன்றியுடையவாகாக இருக்க வேண்டும்.
ஆனால் எமது பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரத்தினைப் பெற்றவர்கள் இன்று மக்களின் தேவைகளையும், பிரச்சிணைகளையும் கருத்திற்கொள்ளாமல் தலைநகரிலே தங்களது குடும்பத்தோடு உள்ளாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை நமது பிரதேசத்தவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது எமது பிரதேசத்திலே அரசியல் அதிகாரத்தோடு பலர் இருந்தும் அவர்களால் இப்பிரதேசத்தினுடைய அபிவிருத்தி தொதடர்பில் எந்தவொரு திட்டமுமில்லை அதிகாரத்தில் இருக்கின்ற ஒரே கட்சியைச் சேந்தவர்களுக்குள் இன்று அதிகாரப் போட்டியின் காரணமாக சண்டைகளும், பிரச்சிணைகளும் இடம்பெற்றுக்கொண்டிருப்பதனையிட்டு வெட்கப்பட வேண்டியுள்ளது.
குறிப்பாக கட்சி பேதங்களுக்கப்பால் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து இப்பிரதேசத்தினுடைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் முட்டிமோதி இப்பிரதேச அபிவிருத்தி தடைப்படுமாகவிருந்தால் இவர்களின் சுயநலப்போக்கு சம்மந்தமாக மக்கள் மத்தியில் பகிரங்கமாகவே சொல்ல வேண்யேற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.