ஹைதர் அலி -
மட்டு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் அழைப்பின்பேரில் 2016.09.18ஆந்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வைத்தியசாலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பானது வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் உபதலைவரான எஸ்.எச்.எம். அறபாத் (ஸஹ்வி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வைத்தியசாலையின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களும் மிக முக்கிய குறைபாடாகவுள்ள ஆளணி பற்றாக்குறை தொடர்பாக வைத்தியர்கள், தாதி, குடும்ப நல உத்தியோகத்தர் மற்றும் காவலாளி போன்ற வெற்றிடங்களுக்கு ஆளணிகளை துரித கதியில் பெற்றுத்தருமாறும் ஆளணி பற்றாக்குறை காரணமாக இங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் சரியான முறையில் சிகிச்சை பெறமுடியாமல் பல்வேறுபட்ட அசௌகரியங்களையும், இன்னல்களையும் அனுபவித்து வருவதாகவும், இவ்வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கிராமங்களிலிருந்து தமிழ் மக்களும் சிகிச்சை பெற வருவதாகவும் அபிவிருத்தி குழு உறுப்பினர்களால் மாகாண சபை உறுப்பினருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை கருத்திற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இவ்வைத்தியசாலைக்கான ஆளணி தொடர்பாக முன்கூட்டி மாகாண முதலமைச்சர், மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இவ்வைத்தியசாலையின் ஆளணி தொடர்பாக கலந்துரையாடி இருப்பதாகவும், இதனை துரிதப்படுத்தி பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதியளித்தார். இறுதியில் வைத்தியசாலையைின் நோயாளர் விடுதிக்கு சென்று அங்குள்ள நோயாளிகளின் சுகதேராரோக்கியத்தையும் கேட்டறிந்து கொண்டார்.