ஹட்டன் சுழற்சி நிருபர்-
கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான விநாயகர் சதுர்த்தி தின வருடாந்த தேர்த் திருவிழா கடந்த மாதம் 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ. ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் 21ஆம் திகதி முதல் 04.09.2016 ஆம் திகதி வரையான பதினைந்து நாட்களும் தினசரி காலை 9.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி 108 அஸ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று நண்பகல் சிறப்புபூஜை, மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜைகள், மும்மூர்த்திகளின் உள்வீதியுலா என்பன இடம்பெற்று வந்தது.
அத்தோடு 29ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும், 03.09.2016 ஆம் திகதி புதன்கிழமை வேட்டைத் திருவிழாவும், 28ஆம் திகதி வியாழக்கிழமை பறவைக்காவடி, பாற்குடம், கற்பூரச்சட்டி எடுத்துவரப்பட்டு பாலாபிஷேகமும் இடம்பெற்றது. 05.09.2016 அன்று சுவாமிகள் தேவஸ்தானத்திலிருந்து வெளிவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்புரிந்தது. 06.09.2016 ஆம் திகதி முத்தேர் பவனி ஆலயத்தை வந்தடைந்தவுடன் பச்சை சார்த்தி திருமூர்த்திகளுக்கு பிராயசித்த அபிஷேகம் இடம்பெற்று தீர்த்தோற்சவத்துடன் மாலை கொடியிறக்கம் இடம்பெறுகிறது.
07.09.2016ஆம் திகதி மாலை பூங்காவனத்திருவிழா திருவூஞ்சல் சண்டேஸ்வரர் உற்சவம் இடம்பெற்று செப்டம்பர் 8 ஆம் திகதி வைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறவுள்ளது. உற்சவ காலங்களில் அடியார்களுக்கு பகல் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டு வந்ததோடு, இதில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.