எம்.ரீ. ஹைதர் அலி-
காத்தான்குடி பஸ் டிப்போ வீதி சேதமடைந்து நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதோடு, மழைக் காலங்களில் இவ்வீதியில் வெள்ள நீர் அதிகமாக தேங்கி காணப்படுவதால் இப்பிரதேச மக்களும் மற்றும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் அதிக சிரமங்களை எதிர்கொள்வதோடு இவ்வீதியால் பயணிக்கும் இலங்கை போக்குவரத்தி சபைக்கு சொந்தமான பஸ்களும் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே பயணிக்கின்றன.
இவ்வீதியை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியில் இன்று காத்தான்குடி பஸ் டிப்போ வீதி தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்படுகின்றது.
காத்தான்குடி நகரசபையின் செயலாளர்ஸபி மற்றும் நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் புனரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதிக்கு 2016.09.04ஆந்திகதி விஜயமொன்றினை மேற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறூக், வீதி புனரமைப்பு சம்மந்தமான மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டதோடு எதிர்வரும் மழைக் காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்காத முறையிலும் மக்களுக்கு சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையிலும் இவ்வீதியினை அமைப்பதற்கு நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தற்போது வரை வடிகான் அமைக்கப்படாத இவ்வீதியினை சரியான முறையில் புனரமைத்து தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சின்னத்தோனாவின் மூலம் இவ்வீதியில் உள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.