எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
பொத்துவில் தொகுதியின் வடக்குப்புற எல்லைக்கிராமமான அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய மாளிகைக்காடு பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக ஸ்ரீலங்கா சமூக அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்று அண்மையில் மாளிகைக்காடு தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.
சபையின் தலைவரும் சமூக வலுவுட்டல் நலனோம்பு அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் சபையின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.ஸி.செயின் , சபையின் பொருலாளர் பீ.சம்சுதீன் உள்ளிட்ட சபையின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய சபையின் தலைவரும் சமூக வலுவுட்டல் நலனோம்பு அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.ஜாஹிர் தெரிவிக்கையில்,
மாளிகைக்காடு பிரதேசம் அரசியல் ரீதியாக பின்தள்ளபட்டாலும் அதன் அபிவிருத்தியின் பால் இக்கிராமத்து மக்கள் ஒன்றிணைந்து இருப்பது அதிலும் மாளிகைக்காடு மத்தி , மேற்கு , கிழக்கு பிரதேச இளைஞர்கள் இணைந்திருப்பது மிகவும் மகிழ்சியையும் உட்சாகத்தையும் தருகின்றது.
மாளிகைக்காடு கிராமம் காரைதீவு பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குள்ளும் , பொத்துவில் தொகுதியின் எல்லையில் அமைந்திருப்பதாலும் பல வழிகளில் சிறப்பு பெற்றாலும் அபிவிருத்தியின் போது பல தரப்பினராலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளமை மிகவும் வேதனையைத் தருகின்றது. தொடர்ந்தும் இப்பிரதேசம் புறக்கணிக்கப்பட்டு வருவதனை சகித்துக் கொள்ள முடியாத இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியிருக்கும் இச்சபை மாளிகைக்காடு பிரதேசத்தில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகளை அடையாளம் கண்டு முன்னுரிமை அடிப்படையில் அவற்றை முன்னெடுத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்யவுள்ளது. மாளிகைக்காடு கிராமம் மூன்று கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதுடன் இரண்டு பாடசாலைகளையும் மூன்று பள்ளிவாசல்களையும் அதில் இரண்டு ஜும் ஆ பெரிய பள்ளிவாசல்களும் உள்ளடங்குகின்றன. 45 வருடங்களுக்கு முன்னர் காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் எம்.எம்.முஸ்தபாவினால் சாய்ந்தமருது உள்ளக பிரதேசத்திற்கு மின்சாரம் வருவதற்கு முன்னதாகவே மாளிகைக்காடு பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அதே போன்று தனியான உப தபால் நிலையமொன்றும் மருத்துவ நிலையமொன்றும் இக்கிராமத்தில் அமையப் பெற்றுள்ளது.
கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது இக்கிராமம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதுடன் பெரும் அழிவுகளையும் 56 பாடசாலை மாணவர்கள் உட்பட பல உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. மீன்பிடி , விவசாயம் ,மற்றும் கூலித் தொழில் செய்து தமது குடும்பத்தை வழிநடத்தும் குடும்பத்தலைவர்களை கொண்ட கிராமத்தில் அரசாங்க நிலம் இல்லாமல் இருப்பது பொதுவான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பிரதான தடையாக இருந்து வருகின்றது.
மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியலயத்திற்கு அருகிலுள்ள சிறியதொரு காணியில் பல்தேவை கட்டிடமொன்று அமையப் பெற்று இக்கட்டிடத்தில் 40 வருடங்களுக்கு மேலாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கும் உப தபால் நிலையம் மாற்றப்படுவதுடன், சகல வசதிகளுடன் கூடிய நூலகம், கிராம சேவக உத்தியோஸ்தர்களுக்கான அலுவலகங்கள், கூட்ட மண்டபம், ஏனைய தேவைகளுக்கான அலுவலகங்கள் நிறுவப்பட வேண்டும். இந்த முயற்சியில் இக்கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாளிகைக்காடு ஸ்ரீலங்கா சமூக அபிவிருத்தி சபை ஊடாக தனவந்தர்களினதும் பரோபகாரிகளினதும் தன்னார்வு நிறுவனங்கள் மற்றம் அரசியல் பிரமுர்கள் மூலமாகவும் உதவிகளைப் பெற்று மாளிகைக்காடு கிராமத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் கைகோர்க்க வேண்டும். - எனத் தெரிவித்தார்.