யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் தொழுகை அறை தாக்கப்பட்டமை வருத்தத்துக்குரியது எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் யாழ் பல்கலைக்கழக நிருவாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் கல்விப்பிரிவுப் பணிப்பாளர் டாக்டர். ஷாபி ஸிஹாப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணத்தில் மீண்டும் துளிர்விட்டு வரும் இனநல்லுறவுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், இனந்தெரியாதோர் மேற்கொண்டுள்ள தாக்குதல் முஸ்லிம்களை வருந்தச்செய்துள்ளது. யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் சகோதர இனங்களான தமிழ், சிங்கள மாணவர்களுடன் மிகவும் ஐக்கியத்துடன் பழகி வருகின்றனர். கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து, ஒரே கூரையின்கீழ் கல்வி கற்கும் இந்த மாணவர்களுக்கிடையே வேற்றுமையை ஏற்படுத்துவதற்காக, ஐக்கியத்தை விரும்பாத சக்திகள் இவ்வாறான காரியங்களை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் எமது கட்சியின் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஏற்பாட்டில், கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களைச் சந்தித்து, தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறிய போது, பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெறப்பட்டன. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், யாழ் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தார். மிகவும் அன்பாகவும், கனிவாகவும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும் தம்மிடம் தெரிவிக்குமாறு ஆலோசனை வழங்கி இருந்தார்.
இந்த வகையில், தொழுகையறை உடைப்புப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை அவர் பெற்றுத்தருவார் என நாங்கள் வலுவாக நம்புகின்றோம். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அலட்சியப் போக்கே இந்தச் சம்பவம் ஏற்பட இடமளித்துள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே இது தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல்கலைக்கழக நிருவாகத்திடம் கோரிக்கை விடுக்கின்றதென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.