காவிரி நீர்ப்பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதோடு இப்பிரச்சினையிலிருந்து இலங்கை சிறுபான்மை இனங்களும் பாடம் படிக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி குறிப்பிட்டார்.
கட்சித்தலைமையகத்தில் நடை பெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்தியாவில் பல மதங்கள், பல மொழிகள் இருந்தும் இந்தியா என்ற வகையில் அனைத்து இந்தியர்களும் ஒன்று படுவார்கள் என்ற கருத்து மனித அத்தியாவசிய தேவையான தண்ணீருக்காக ஒரே நாட்டு மக்கள் தாக்கப்பட்டதன் மூலம் பொய்யாகியுள்ளது. ஒரே நாடு மொழி ரீதியாக பிரிந்தும் மாநிலங்களுக்கு மத்தியிலான பொதுத்தேவைகள் மீதான தடைக்கு இம்மாநில பிரிப்பு காரணமாகியுள்ளதை காணலாம்.
இப்பிரச்சினையில் அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல மிருகத்தனமான இத்தகைய செயல்கள் மோடியின் அரசில் தொடர்வது நிறுத்தப்பட வேண்டும். அதே போல் இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன் வைத்த கருத்துக்கிணங்க இலங்கையை சிங்கள மாநிலம், தமிழ் மாநிலம் என பிரிக்கும் பட்சத்தில் இலங்கையிலும் இவ்வாறான தண்ணீர் பிரச்சினை ஏற்படுவதற்கும் சாத்தியம் உள்ளது. காரணம் இலங்கையின் நீர் ஊற்றுக்கள் சிங்கள மாநிலத்திலேயே உள்ளன. அதே போல் கிழக்கின் விவசாயமும் மகாவலி கங்கை, இங்கினியாகலை நீர்த்தேக்கம் என்பனவற்றையே நம்பியிருக்கும் யதார்த்தம் உள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இனவாதிகள் தண்ணீரை தடை செய்தால் இந்தியாவின் மோடி அரசாங்கம் புதினம் பார்த்துக்கொண்டிருப்பது போல் இலங்கையின் மத்திய அரசும் இருந்தால் சிறுபான்மை மக்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைக்குள் தள்ளப்படுவார்கள். அதே போல் வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டாலும் இதுவே சிங்கள பெரும்பான்மையின் ஆத்திரத்துக்குள்ளாகி கர்நாடக நிலைமை இங்கும் ஏற்படும் சாத்தியமும் உள்ளது.
எனவே இந்தியாவின் கர்நாடக நீர்ப்பிரச்சினை இலங்கை அரசியலில் ஒரு பாடமாக பார்க்கப்படுவதுடன் இந்திய தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு மனிதாபிமானம் நிலை நாட்டப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் உலமா கட்சி இந்திய அரசை கேட்டுக்கொள்கிறது.