மஹிந்த + கருணா?

இது வரைகாலமும் தன்னை துட்டகைமுனு மன்னனாக பாவனை செய்து கொண்டு வந்த மஹிந்தவின் யுத்த வெற்றியை பெரும்பான்மை இனத்தவர் மறந்து போகக் கூடியவாறு தற்போதைய மைத்திரி - ரணில் தரப்பு வெற்றிகரமான காய்களை நகர்த்தி அதில் 70 சதவீதமான வெற்றியையும் பெற்று விட்டனர்.

மிகுதி 30 சதவீதமானது மஹிந்தவின் குடும்பத்தாரது பங்களிப்பு, மஹிந்த ஆதரவாளர்கள் போன்றவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டாலும் அவை மஹிந்த மீண்டும் ஆட்சியை கைப்பற்றிக் கொள்ள போதுமான அளவு பலம் சேர்க்காது என்பதே உண்மை.

இத்தகைய ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் மஹிந்த தனக்கு இதுவரை காலமும் வெற்றிகளையும் செல்வங்களையும் தேடித்தர முக்கிய காரணியாக அமைந்தது விடுதலைப் புலிகள் என்ற ஒரு காரணப்பொருளே என்பதை மறக்க மாட்டார்.

மீண்டும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை தக்க வைக்க, தற்போது மௌனித்த விடுதலைப்புலிகளை மீண்டும் கொண்டுவர வேண்டியது அவசியம். அப்போதே அவரின் அரசியல் செல்வாக்கோடு நாட்டு மக்களுக்கு அவர் தேவைப்படுவார் என்ற சூழ்நிலையும் ஏற்படுத்தப்படும்.

இதேவேளை விடுதலைப் புலிகள் மீதான போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெற முக்கிய கருவியாக காணப்பட்ட கருணா மீண்டும் தனது அரசியல் சதுரங்கத்தை ஆரம்பித்து விட்டார்.

கருணாவின் அரசியல் மீள் பிரவேசம் அத்தோடு அவருடைய புதிய கட்சியில் கிழக்கில் உள்ள உயர்கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை இணைத்துக் கொள்வதை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு கருணாவின் வருகையால் வட - கிழக்கு ஒன்றிணைப்பு என்பது எத்தகைய மாற்றத்தினை பெறும் என்பதும் அவதானிக்கப்பட வேண்டியதே.

சுதந்திரக் கட்சியில் மஹிந்தவின் ஆதரவில் ஓர் காலகட்டத்தில் இருந்து வந்த கருணா போர் வெற்றிக்கு பின் கவனிப்பாரற்று ஒடுங்கியிருந்தார். பின்னர் மீண்டும் இவர் வருகின்றது மஹிந்தவிற்கு ஆதரவினை கூட்டுவதற்காகவே என கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு பக்கம் விடுதலைப் புலிகளுக்கு புகழாரம் அதே சமயம் மற்றோர் பக்கம் விடுதலைப் புலிகள் மீண்டும் என்ற அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி தனது பழைய மக்கள் செல்வாக்கினை மீண்டும் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளையும் மஹிந்த செய்து வருகின்றார்.

இதற்கு விடுதலைப் புலிகளின் மீதான யுத்தத்தின் போது தன் பக்கம் இருந்தவர்கள் முக்கியம். இதன் காரணமாகவே கருணா தற்போது அரசியலில் பிரவேசிப்பதாகவும் இதுவும் மஹிந்தவின் செயற்பாடா என அரசியல் நோக்குனர்கள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் கருணா எனும் தனிநபர் மஹிந்தவிற்கு முக்கிய புள்ளியாக திகழ்ந்தார். கருணா பிரித்தானியாவிற்கு சென்றிருந்த போது அவரை மறுபடியும் நாட்டிற்கு கொண்டு வந்ததுடன் பதவியும் கொடுத்து தனக்கு ஆதரவாளராக மஹிந்த இருத்திக்கொண்டதும் அறியத்தக்கதே.

எவ்வாறாயினும் கருணாவை தமிழீழ ஆதரவாளர்கள் எதிரியாக நோக்கி வரும் வேளையில் அவர் விடுதலைப் புலிகள் தொடர்பில் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்தினால் மட்டுமே தனித்து இயங்க அல்லது அரசியல் வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் காரணமாக மீண்டும் கருணாவின் அரசியல் பிரவேசம் தமிழ் மக்களுக்கு எத்தகையதோர் நிலைப்பாட்டை ஏற்படுத்தும், விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர் எவ்வாறான கருத்துகளை வெளியிடப் போகின்றார்? அது அரசியலில் புது மாற்றங்களை ஏற்படுத்துமா? என்ற பல வகையான கேள்விகளை அரசியல் அவதானிகள் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -