அஸ்லம் எஸ்.மௌலானா-
இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது தேசியத்தையும் சுயநிர்ணயத்தையும் உத்தரவாதப்படுத்துவதற்கு சர்வதேச நியமனங்களுக்கேற்ப நமது வரலாறு தொகுக்கப்பட வேண்டும் என சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.என்.மர்ஸூம் மௌலானா தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் அல்-அஷ்ரக் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றபோது தலைமை வகித்து பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அமீர் அலி முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
"இலங்கை முஸ்லிம்களின் வரலாறுகள் தொடர்பில் சில பேராசிரியர்கள், கலாநிதிகள் அங்கும் இங்குமாக நிறைய கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ள போதிலும் அவை இன்னும் சரியான ஆதாரங்களுடன் முறைப்படி தொகுக்கப்படவில்லை என்பது நமது சமூகத்தின் மிகப்பெரும் குறைபாடாக இருந்து வருவதுடன் அதுவே நமது சமூகத்தின் பின்னடைவுக்கும் காரணமாக இருக்கின்றது.
இன்று வடக்கு, கிழக்கு தமிழ் சமூகம் தாயகக் கோட்பாட்டை முன்னிறுத்தி சமஷ்டி அடிப்படையிலான சுயரநிர்ணய உரிமையை கோரி வருகின்றனர். ஏனென்றால் அதற்கான அத்தனை தகுதிகளையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். அதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது அவர்களது வரலாறாகும். தமிழ் சமூகம் தமது வரலாற்றினை சர்வதேச நியமங்களுக்கேற்ப நேர்த்தியாக தொகுத்து, ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு சென்று அதன் அங்கீகாரத்தை பெற்று, சட்ட வல்லமைக்குட்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் கூர்ப்படைந்த சமூகமாக சர்வதேசத்தில் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கின்றோம்.
சுயநிர்ணய கோரிக்கை என்பது தேசியத்தில் இருந்தே உருவாகின்றது. அத்தகைய தேசியத்திற்கு வரலாறு அடிப்படையாக அமைகிறது. இன்று அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எதில் தொடங்கி எதில் முடிப்பது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றது.
அதிகார பரவலாக்கலின் போது முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம் எவ்வாறானதாக அமையப்போகின்றது. தமிழ் தேசியத்துடன் எதுவரை உடன்பட்டுச் செல்லலாம், பௌத்த தேசியத்துடன் எதுவரை ஒன்றித்து செல்லலாம் என்பன தொடர்பில் தெளிவில்லாமல் இருக்கின்றோம்.
யாப்பு மாற்றத்தின்போது ஜனாதிபதி முறைமை வலுவிழக்கச் செய்யப்பட்டு, நாடாளுமன்ற அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம் தேசியம் புறந்தள்ளப்பட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சமஷடித் தீர்வு முன்வைக்கப்படுமானால் அது தமிழ் சமூகத்திற்கு வலுச் சேர்த்து, முஸ்லிம் சமூகத்தை நலிவடையச் செய்யும் ஆபத்து இருப்பதை உணர்கின்றோம்.
இன்று அனைத்து சர்வதேச வலைப்பின்னல்களும் தமிழ் சமூகத்திற்கு சார்பாக இருப்பதையும் முஸ்லிம் சமூகம் கவனத்தில் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதையும் கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையினால் தான் முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றை நேர்த்தியாக தொகுக்க வேண்டியதன் அவசியத்தை சித்திலெப்பை ஆய்வு மன்றம் உணர்ந்து, அதற்கான முயற்சிகளில் களமிறங்கியுள்ளது. அதற்கு பேராசிரியர் அமீர் அலி அவர்கள், தலைமையேற்பதற்கு முன்வந்துள்ளதுடன் பேராசிரியர்களான எம்.எஸ்.எம்.அனஸ், தீன் முஹம்மத், சோ.சந்திரசேகரம், சபா ஜெயராஜ், எம்.எம்.மஹ்ரூப் போன்ற ஆளுமைகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருக்கின்றனர். இது எமக்கு கிடைத்திருக்கின்ற உன்னதமான வாய்ப்பாகும். அதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் எம்முடன் இணைந்து பணியாற்றுவதற்கு முன்வர வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் செயலாளர் பொறியியலாளர் நியாஸ். ஏ.சமத் அறிமுகவுரை நிகழ்த்தியதுடன், டாகடர் எஸ்.நஜிமுதீன், விரிவுரையாளர் எம்.எம்.பாஸில், கரைவாகு வரலாற்று ஆய்வாளர் எச்.எம்.அலியார், மூத்த எழுத்தாளர்களான ஹசன் மௌலானா, மருதூர் ஏ.மஜீத் உட்பட பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.