ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
இலங்கைக்கு கூடுதல் அந்நியச் செலாவனியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கையில் அறபு மொழிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்
பல்கலைக்கழகத் திருத்தச் சட்டம் மீதான விவாதம் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையர்கள் அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர் இவர்கள் மூலம் பெருமளவு வருமானத்தை நாம் பெற்று வருகின்றோம். இவர்களில் அதிகமானோர் அறபு மொழி தெரியாமலேயே அங்கு தொழிலுக்குச் செல்கின்றனர்.
இதனால் அவர்களால் பெரிய தொழில்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை இருக்கின்றது. சாதாரண தொழில்களிலேயே அவர்கள் அமர்த்தப் படுகின்றார்கள். இந்நிலையை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.
இங்கிருந்து தொழிலுக்குச் செல்கின்றவர்களுக்கு அறபு மொழி அறிவை வழங்கி அனுப்ப வேண்டும். இதன் மூலம் நமது நாட்டவர்களும் அங்கு முக்கிய தொழில்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
இதற்காக நாம் அறபுமொழிப் பல்கலைக்கழகமொன்றை இலங்கையில் உருவாக்க வேண்டும். இப்பல்கலைக்கழகம் தற்போது இந்த அமைச்சின் கீழ் இயங்கும் பாளி மொழிப் பல்கலைக் கழகத்தைப் போல அமைச்சின் கீழேயே தனியாக இயங்க வழி செய்யப் பட வேண்டும்.
இது தொடர்பாக கடந்த 1990ஆம் ஆண்டு அப்போதைய உயர்கல்வி அமைச்சராக இருந்த மர்ஹ_ம் ஏ.ஸீ.எஸ்.ஹமீத் அவர்கள் குழுவொன்றை நியமித்து ஆய்வுகள் மேற்கொண்டதாக நான் அறிகின்றேன். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் இப்பணியை முன்னெடுக்கலாம். இதன் மூலம் நாட்டின் வருமானத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது.
கௌரவ அமைச்சர் அவர்கள் அண்மையில் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்து திருகோணமலை வளாகத்தில் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது திருகோணமலை வளாகத்திலே இரண்டு பீடங்களும் (faculties) சித்த மருத்துவப் பிரிவும் மட்டுமே இயங்குகின்றன. எனவே இங்கு இன்னும் பீடங்களை அதிகரித்து இதனைத் தனிப் பல்கலைக் கழகமாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தான் இலங்கையில் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியை முன்னெடுத்தது. அதன் பின் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் காலத்திலும் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
இந்த வரிசையில் மைத்திரி – ரணில் நல்லாட்சிக்காலத்திலும் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதன் முன்னோடியாக திருகோணமலை வளாகத்தை தனிப் பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்துங்கள். இது வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும்.