பைஷல் இஸ்மாயில்-
மக்கள் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதற்காகவே இந்த நல்லாட்சி அரசு மிக அதிக பணத்தினை செலவு செய்து வருகின்றது. விஸேடமாக கிழக்கு மாகாணத்துக்கு 1000 மில்லியன் ரூபாவினை இந்த நல்லாட்சி அரசினால் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் உயர் அதிகாரிகளுடன் அபிவித்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
சுகாதார சேவைகளிலும் அது தொடர்பான அபிவிருத்தி விடயங்களிலும் யாரும் பின்நிற்பதோ அந்த விடயங்களை கால தாமதம் அடைய வைப்பதோ கூடாது. நீங்கள் மக்களுக்கு சேவைகளை செவ்வனே வழங்கவேண்டும் என்பதற்காக அரசினால் நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அதேபோல் என்னையும் கிழக்கு மாகாண சபைக்கு பொதுமக்கள் தெரிவு செய்து மக்கள் பிரதி நிதியாக இந்த கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பி வைத்ததன் மூலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையினால் எனக்கு சுகாதார அமைச்சை வழங்கி அதன் மூலம் மக்களுக்கான சுகாதார சேவைகளை உரிய நேரத்தில் வழங்கி வைக்கவேண்டும் என்று நியமிக்கப்பட்டுள்ளேன்.
இதை நாம் அனைவரும் கவனத்திற்கொண்டு மக்களின் சுகாதார சேவைகளை வழங்கவும், அதனை தாமதப்படுத்தாமலும் நாம் முன்னின்று உழைக்கவேண்டும். என்னால் முன்னெடுக்கப்படுகின்ற சகல வேலைத்திட்டங்களுக்கு நீங்களும் அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் உரிய நேரத்தில் தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும் என்றார்.
இந்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன், உதவி பிராந்திய பணிப்பாளர், கணக்காளர், தொழில் நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.