முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் நேற்று பாராளுமன்ற சபா மண்டபத்தில் அருகருகே அமர்ந்திருந்து உரையாடியதை காணமுடிந்தது.
மலேஷியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை மற்றும் அங்கு மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக மலேசியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக மஹிந்த அணி ஆதரவு எம்.பி.யான தினேஷ் குணவர்த்தன 23 இன் கீழ் 2 இல் விசேட கேள்வியொன்றை பிரதமரிடம் எழுப்பி உரையாற்றினார். அதன் பின்னர் ஆளுந்தரப்பிற்கும் எதிர்த்தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நண்பகல் 2.20 மணியளவில் சபைக்குள் வந்து அமர்ந்தார்.
இதன்போது தினேஷ் குணவர்தன எம்.பி. கடும் தொனியில் புலிகள் முன்னாள் ஜனாதிபதியை இலக்கு வைத்துள்ளனர். எனவே,அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டுமென சபையில் வாதிட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சபா மண்டபத்தில் முன்வரிசையில் அருகருகே கதிரைகளில் அமர்ந்திருந்த மஹிந்த ராஜபக் ஷவுக்கும் சம்பந்தனுக்கும் இடையே உரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக் ஷ தனது கைகளை அசைத்தவண்ணம் எதிர்க்கட்சித் தலைவரிடம் எதனையோ விளக்குவதை காண முடிந்தது.
தினேஷ் குணவர்தன எம்.பி.யின் கேள்விக்கு பிரதமர் பதிலளிப்பதற்கு முன்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சபையில் எதனையாவது கூற விரும்பினால் கூறலாம் அதன் பின்னர் நான் பதிலளிக் கிறேன் என்றார். இதற்கு கைகளை விரித்து எதுவுமே கூறுவதற்கில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உரை நிகழ்த் துவதை நிராகரித்தார்.