எம்.வை.அமீர் -
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம், ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தி நாட்டின் கரையோர பிரதேசங்களில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள கடற்கரை பிரதேசங்களை சுத்தப்படுத்தும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் 2016-09-22 ஆம் திகதி இடம்பெற்றது.
கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் கடல் சுழல் பாதுகாப்பு அதிகார சபை (மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு) ஏற்பாட்டில் “அழகிய கடற்கரைப்பிரதேசத்தை சுத்தமாகப் பேணுவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர் மற்றும் சிரேஷ்ட கிராமசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.நிஸ்ரின் உள்ளிட்டவர்களும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திவிநெகும உத்தியோகத்தர்கள் சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசலின் செயலாளர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இயற்கை வளங்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பொறுப்பின் கீழ் வைத்து மக்கள் பாதுகாப்பு தொடர்பான விடயங்களிலே மிகவும் அக்கறையோடு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.