சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்திற்குள் கையடக்க தொலைபேசி தீப்பிடித்து புகை வெளியேறியதால் பயணிகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ பயணிகள் விமானம் இன்று புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், சென்னையை அண்மித்த போது பயணிகள் இருக்கையின் மேல்பகுதியில் திடீரென புகை வெளிவந்துள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் விமான ஊழியர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
விமான ஊழியர்கள் வந்து சோதனை செய்தபோது ஒரு பயணியின் கைப்பையில் இருந்த சாம்சங் கேலக்ஸி நோட் 2 கையடக்க தொலை பேசியில் இருந்து புகை வருவது கண்டறியப்பட்டது. இதனால் பயணிகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து விமானிக்கு தெரியபடுத்தியதையடுத்து அவர் விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு நிலைமையை விளக்கினார்.
இதனையடுத்து, குறித்த கையடக்க தொலைபேசி அப்புறப்படுத்தப்பட்டு தண்ணீரில் அமிழ்த்தி செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதேவேளை, பயணிகள் சாம்சங் கேலக்ஸி நோட் 2 கையடக்க தொலை பேசியை விமானத்துக்குள் எடுத்து வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.