ஏ.எம்.றிகாஸ்-
கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் ஒருபோதும் இணைக்கப்படக்கூடாது. கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தனியாக இருந்து சுதந்திரமாகச் செயற்படவேண்டுமென தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் தெரிவித்தார். மட்டக்களப்பு ஏறாவூரில் நடைபெற்றது. 'சுதந்திர கிழக்கு' பிரகடன விழாவில் பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏறாவூர்-சமூக சேவைகள் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்எம் இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.சுபைர் மற்றும் அரசியல் பிரமுகரான வை.எல்.எஸ்.ஹமீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.
இனப்பிரச்சினை தீர்விற்காக வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறித்து முஸ்லிம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வாகவே 'சுதந்திர கிழக்கு' பிரகடனம் செய்யப்பட்டது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் - 'மறைந்த தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் தலைநிமிர்ந்து நின்ற முஸ்லிம் சமூகம் தற்போது பலவீனமான ஒரு தலைமையின்கீழ் முஸ்லிம்கள் காட்டிக்கொடுக்கப்படுவார்கள் என்ற அச்சத்துடன் உள்ளது. எமது சமூகத்தினர் பதவி என்றால் ஓடிவருவார்கள் என நினைத்துக்கொண்டதனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவி தருகிறோம் என தமிழ் தலைமைகள் சாதாரணமாக கூறுகிறார்கள். ஆனால் தமிழ்த் தலைமைகளுக்கு நாங்கள் கூற விரும்புவது-கிழக்கு மாகாணம் தொடர்பாக பேசுவதாகவிருந்தால் கிழக்கிலுள்ள அரசியல் தலைமைகள், புத்திஜீவிகளுடன் மாத்திரமே பேசவேண்டும். கிழக்குக்கு வெளியேயுள்ள தலைமைகளோடு பேசமுடியாது என்பதுதான்.
முஸ்லிம் சமூகம் வியாபாரம் செய்யப்பட்டுவிட்டது. இதனால் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக நோர்வேயின் காய்கள் நகர்த்தப்படுகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் வாய்திறக்கவில்லை. நாங்கள் தமிழர்களுக்கு எந்தவித அநியாயமும் இழைக்கவேண்டும் என நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை ஆனால்இதயசுத்தியோடு உண்மைக்கு உண்மையாகப் பேசுவதாகவிருந்தால் வாருங்கள் என தமிழ் அரசியல் தலைமைகளுக்கு நாங்கள் கூறியுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளை நிலத்தொடர்புடன் வடக்கோடு இணைப்போம். அவ்வாறு இணைக்கின்றபோது கிழக்கிலே முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு நிலங்களை வைத்துகொள்வோம். கிழக்கிலே உள்ள சிங்கள பிரதேசங்களை ஊவா அல்லது வடமத்தி மாகாணங்களோடு இணைப்போம். இவ்வாறு இணைக்கும்போது தமிழ் பெரும்பான்மை முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட மாநிலங்களை உருவாக்கி அதற்கு எவ்வித அதிகாரங்கள் தேவையோ அவை தொடர்பாக பேசுவோம் இதற்கு நாங்கள் தயார்' என்றார்.