அப்துல்சலாம் யாசீம்-
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என முன்னாள் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமும் மேற்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் தளபதியுமான மெஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்ஹ தெரிவித்தார்.
இரானுவம் 07வது தடவையாக நடாத்திய "நீர்க்காகம்" பயிற்சியின் இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
விஷ ஊசி விடயம் தொடர்பில் பதில் கூறக்கூடிய பொறுப்புள்ள அதிகாரி நானாவேன்.ஏனெனில் சுமார் ஒன்றரை வருட காலம் புணர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக செயற்பட்டுள்ளேன். எனது பதவிக்காலப்பகுதிக்குள் சுமார் 11600 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கியுள்ளேன்.
இந்த கால கட்டத்தில் இவர்களுக்கான புனர்வாழ்வளிப்பு உற்பட வாழ்வாதார மேம்பாட்டுத்திட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை,ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன.
அந்தடிப்படையிலேயே இவ்வாறான போலி குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதனையும் நான் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனவும் அவர் தெரிவித்தார்.