வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் , வடமாகாண ஆளூநர் பக்கமா ? தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கமா ? என்பதனை தெளிவு படுத்த வேண்டும் என வடமாகான சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் கோரினார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அஸ்மீனிடம் , சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்தார்.
அது தொடர்பில் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளரை வடமாகாண ஆளூநருடன் இணைந்து வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மீன் சந்தித்து உள்ளார்.
முஸ்லீம் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எடுத்துக்கூறிய கடப்பாடுகள் அவருக்கு இருக்கின்றது. அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் அதற்காக அவர் ஆளூநருடன் இணைந்து ஐநா செயலாளரை சந்திக்க வேண்டிய தேவையில்லை. அவர் அன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஊடாக அதனை செய்து இருக்கலாம்.
எனவே அவர் ஆளூநருடன் இணைந்து சந்தித்தமை தொடர்பில் தெளிவு படுத்த வேண்டும். சுத்து மாத்து அரசியல் செய்ய கூடாது என கோரினார்.
அதற்கு பதில் அளித்த அஸ்மீன் , முஸ்லீம் மக்களின் பிரச்சனை தொடர்பில் ஐ.நா செயலாளரிடம் மகஜர் கையளிக்க வேண்டும் என கோரி இருந்தேன். அதற்கு ஏற்பாட்டாளர்கள் ஆளுநர் அலுவலகத்தில் வந்து கையளிக்குமாறு கோரி இருந்தார்கள். அதனால் நான் மகஜர் கையளிக்க மட்டுமே ஆளூநர் அலுவலகம் சென்றேன். அங்கு மகஜரை மட்டுமே கையளித்தேன். ஆளூநருடன் இணைந்து ஐநா செயலாளரை சந்திக்கவில்லை என தெரிவித்தார்.