அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-குச்சவௌி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கும்புறுப்பிட்டி பகுதியில் எட்டு குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (17) திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ உத்தரவிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை-நிலாவௌி-கோனேஷபுரி சுப்பரமணியம் சுரேந்திரன் (24வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவௌி பொலிஸ் பிரிவில் தங்க நகைகளை திருடியமை-கையடக்கத்தொலைபேசி திருடியமை-வீட்டொன்றை உடைத்தமை- போன்ற நான்கு குற்றச்சாட்டுக்களும் துறைமுகப்பொலிஸ் நிலையத்தில் இரண்டு மாலைகளை திருடியமை-மோட்டார் சைக்கிள் திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களும் சம்பூர் பொலிஸ் பிரிவில் தங்க நகை திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களும் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இவருடைய அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கியில் 05 பவுண் நகை அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு அடகு வைக்குமிடத்தில் 04 சைன் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனையில் அடகு வைக்குமிடத்தில் 01 மாலை அடகு வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.