சுஐப் எம் காசிம்-
வங்காலை கிராமத்துக்கு அணித்தான இரண்டு பிரதேசங்கள் பறவைகள் சரணாலயப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டமை அங்கு வாழும் மக்களுக்கு நிரந்தரமான பல்வேறு பாதிப்புக்களையும் நெறுக்கடிகளையும் ஏற்படுத்தி இருப்பதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் வங்காலை கிராம மக்கள் எடுத்துரைத்தனர்.
அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னாருக்கு விஜயம் செய்த காமினி ஜயவிக்ரம பெரேரா மன்னார் கச்சேரியில் வனவளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக இடம் பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் வங்காலை பிரதேச காணிகள் பறவைகள் சரணாலயப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அமைச்சர் றிஷாட் அங்கு விபரித்தார். இது தொடர்பில் அந்தக் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று பிரச்சினைகளை ஆராய வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அமைச்சர் றிஷாட்டுடன் அங்கு சென்று வங்காலை மக்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. டீ. மெல், அமைச்சரின் இணைப்பாளர் மார்க், முன்னாள் கல்விப்பணிப்பாளர் ரெவ்வல், மன்னார் மாவட்ட முதியோர் சங்கத் தலைவர் உட்பட பல அதிகாரிகள் பிரசன்னமாகி இருந்தனர்.
“வங்காலை கிராமம் ஒரு பக்கம் கடலால் சூழப்பட்டது. இன்னொரு பக்கம் வயல் சூழ்ந்த நிலம். இந்த நிலையில் கிராமத்தின் எஞ்சிய இரு பிரதேசங்களும் வன சரணாலயப் பகுதியாக இப்போது பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலே பெரிய கிராமமாகவும் சனச் செறிவு மிக்க கிராமமாகவும் இது இருப்பதனால் மக்களின் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப குடியிருப்புக் காணிகளையும் விஷ்தரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்குண்டு. வீடுகள் அமைப்பதற்கு, பாடசாலை அமைப்பதற்கு, எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கின்றோம். எனவே பறவைகள் சரணாலய பிரகடனத்தை வாபஸ் வாங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
எமது பிரச்சினைகளை அமைச்சர் றிஷாட்டிடம் நாம் எடுத்துரைத்த போது அவர் எங்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்து உங்களை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்தார். நீங்கள் அப்போது உறுதியளித்தவாறு இந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்தமை எமக்கு மகிழ்ச்சி தருகின்றது. எனவே எமக்கு சரியான தீர்வொன்றை பெற்றுத் தருமாறு நாங்கள் வேண்டுகின்றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வங்காலை கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் ஜயவிக்ரம இது தொடர்பில் முறையான கொள்கை ஒன்றை வகுத்து இந்த பிரச்சினையை தீர்ப்பதாகவும் அரச அதிபர், வன விலங்கு தொடர்பான அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கிய ஒரு குழு ஒன்றை அமைத்து இந்த பிரதேசத்துக்கு மீண்டும் அனுப்பி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.