காத்தான்குடி வீடு ஒன்றில் கொள்ளையிடப்பட்ட 20 பவுண் நகைகள் 13 தினங்களின் பின்னர் குறித்த வீட்டுக்கு அருகில் குப்பையில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி, பரீட் நகர் பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெண்ணை தடிகளால் தாக்கிவிட்டு இரண்டு இலட்ச ரூபா பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் புலன்விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக கொள்ளையிடப்பட்ட நகைகள் அனைத்தும் கொள்ளையிடப்பட்ட அதே வீட்டில் முற்றப்பகுதியில் காணப்பட்ட குப்பை மேட்டில் சனிக்கிழமை மாலை வீசப்பட்டு கிடப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் நகைகளை மீட்டுள்ளனர்.
சம்பவ தினம் வீட்டிலிருந்த பெண் மலசலகூடத்துக்குச் செல்ல முற்பட்ட போது அவரதுவீட்டு வளவுற்குள் மறைந்திருந்த நபரொருவர் அந்தப் பெண்ணை தாக்கிவிட்டு பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர் தாக்குதலுக்குள்ளான பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். இதேவேளை, காத்தான்குடி பொலிஸார் மீட்கப்பட்ட நகைகளை தடயவியல் பரி சோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற் கொண்டுள்ளனர்.